சவுதியில் ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை திறக்கிறது டாடா - Sri Lanka Muslim

சவுதியில் ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை திறக்கிறது டாடா

Contributors

-புதுடெல்லி-

 
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இன்று இந்தியா-சவுதி அரேபியா வணிக மன்றக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. வர்த்தகம் மற்றும் கைத்தொழில் இந்திய சம்மேளனமும், சவுதி வர்த்தகக் குழுவும் இணைந்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய சவுதியின் வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி தபிக் பவ்சான் ஐராபியா, இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் குழுமம் தங்களது ஜாகுவார், லேண்ட் ரோவர் தயாரிப்புத் தொழிற்சாலையை சவுதி அரேபியாவில் நிறுவ இருப்பதைக் குறிப்பிட்டார். இந்தத் தொழிற்சாலை உயர்தரக் கார்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பெறும் என்று கூறிய அவர், சவுதியின் கிழக்குப் பகுதியில் இந்தத் தொழிற்சாலை நிறுவப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

ஏற்கனவே, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் அங்கு நல்லமுறையில் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவற்றின் விரிவாக்க முயற்சிகளையும் மேற்கொள்ளும் எண்ணத்தில் டாடா குழுமம் இருக்கின்றது. சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமான விரிவாக்கங்களின் ஒரு முயற்சியான புனித நகரங்களான மெக்காவையும், அல்-மதினாவையும் இணைக்கவிருக்கும் புதிய அதிவேக ரயில்திட்டத்தில் உயர்தரமான தண்டவாளங்களை அளிக்கும் ஒப்பந்தத்தை டாடா ஸ்டீல் பெற்றுள்ளது.

 

அதேபோல், டிசிஎஸ் நிறுவனமும் சமீபத்தில் ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் சவுதியின் அராம்கோ நிறுவனங்களுடன் இணைந்து அனைத்து பெண்கள் சேவை மையம் ஒன்றைத் தொடங்கியுள்ளது என்று மந்திரி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

 

இவைதவிர, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த துறைகளின் இருதரப்பு வர்த்தக மேம்பாட்டிற்கு இருதரப்பு நாடுகளும் முயற்சிக்கவேண்டும் என்று இந்திய வர்த்தக சம்மேளனத் தலைவர் சித்தார்த் பிர்லா குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team