சவுதி அரேபியாவிற்குப் பதிலாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவியை ஜோர்டான் வென்றது! - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவிற்குப் பதிலாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவியை ஜோர்டான் வென்றது!

Contributors

ஐக்கிய நாடுகளின் முக்கியத்துவம் பெற்ற பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு சவுதி அரேபியா கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே தனது பதவியை நிராகரிப்பதாக கூறிய சவுதி அரேபியா, மற்ற நாடுகளை வியக்க வைத்தது.

சிரியாவின் உள்நாட்டு யுத்தம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் இல்லாத மத்திய கிழக்கு மண்டலத்தை உருவாக்க இயலாமை போன்ற விஷயங்களை ஆட்சேபித்து இந்த உறுப்பினர் பதவியை தான் நிராகரிப்பதாக சவுதி அரேபியா அறிவித்தது. இதுமட்டுமின்றி ஈரான்- அமெரிக்கா மோதல்போக்கையும் சவுதி அரசு இங்கு குறிப்பிட்டது.

இதற்கு மாற்றாக ஜோர்டான் மற்ற அரேபிய நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் தேர்விற்கு 193 உறுப்பினர் நாடுகளில் 178 ஓட்டுகளை அளித்ததன் மூலம் ஆசிய நாடுகளும் இந்தத் தேர்விற்கு ஒப்புதல் அளித்தன. மற்ற ஓட்டுகளில் சவுதி அரேபியா தவிர நான்கு நாடுகள் வாக்களிக்கவில்லை. இன்னும் பத்து நாடுகள் உறுப்பினர் கட்டண பாக்கி போன்ற காரணங்களால் வாக்களிக்க இயலவில்லை.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளான பாதுகாப்பு மற்றும் அமைதி போன்றவை குறித்த ஜோர்டானின் இடைவிடாத முயற்சிகளுக்கு சர்வதேச நாடுகள் கொடுத்த ஆதரவினால் மிகவும் பெருமை பெற்றுள்ளதாக ஜோர்டானின் வெளியுறவுத்துறை அமைச்சரான நாசர் ஜுடே தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team