சவுதி அரேபியாவில் நகராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடவும் வாக்களிக்கவும் அனுமதி - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் நகராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடவும் வாக்களிக்கவும் அனுமதி

Contributors
author image

World News Editorial Team

சவுதி அரேபியாவில், முதன் முறையாக, நகராட்சி தேர்தலில், பெண் கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மறைந்த சவூதி மன்னர் அப்துல்லா, அரசியலில் பெண்களும் ஓரளவு பங்கேற்கும் கொள்கையை, 2011ல் அறிவித்தார்.

அதன்படி, வரும் டிச., 12ம் தேதி, சவூதியின் மூன்றாவது நகராட்சி தேர்தல், முதன் முறையாக பெண்களின் பங்களிப்புடன் நடைபெற உள்ளது. இதற்காக, மெக்கா மற்றும் மதினாவில், பெண் வாக்காளர் விவரங்களை பதிவு செய்யும் பணி, கடந்த வாரம், 16ம் தேதி துவங்கியது. இந்நகரங்களில், முதன் முதலாக, பெண் வாக்காளர்களாக, சபினாஸ் அபு அல்-ஷாமத் மற்றும் ஜமால் அல்-சாதி ஆகியோர் பதிவு செய்து கொண்டனர். நேற்று, வேட்பு மனு தாக்கல் துவங்கியது. அதே சமயம், பிற நகரங்களில், பெண் வாக்காளர் விவரங்களை பதியும் பணி, நேற்று முன்தினம் தான் துவங்கியது.

இந்நகரங்களில் வேட்பு மனு தாக்கல், வரும், 30ம் தேதி துவங்கும்; நவ., 29ம் தேதி, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இத்தேர்தலில், 70 பெண்கள் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் ஓட்டளிக்க தகுதியுடையோர் வயது, 21லிருந்து, 18ஆக குறைக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ள இத்தேர்தலுக்காக, 1,263 தேர்தல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அவற்றில் ஆண்களுக்கு, 839; பெண்களுக்கு, 424 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், வரும், செப்., 11 வரை, வாக்காளர்கள், தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று, சவுதி அரசு தெரிவித்துள்ளது.சவுதியில், பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளதற்கு, பெண்ணுரிமை அமைப்பு கள் பாராட்டு தெரிவித்து உள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team