“சவுதி உளவுத்துறையும், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தும் கூட்டு சேர்ந்து சதித்திட்டம்” - Sri Lanka Muslim

“சவுதி உளவுத்துறையும், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தும் கூட்டு சேர்ந்து சதித்திட்டம்”

Contributors

 

“சவுதி உளவுத்துறையும், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தும் இணைந்து, ஈரானிய அணுசக்தி திட்டத்தை செயலிழக்க வைக்க சதித்திட்டம் தீட்டுகின்றன” என ஈரானின் பகுதி-அரசு செய்தி நிறுவனம் ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த இரு உளவுத்துறைகளும் ஒன்றிணைந்து கம்ப்யூட்டர் வைரஸ் ஒன்றை உருவாக்கி அனுப்புவதன் மூலம், ஈரானிய அணுசக்தி திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்க திட்டமிடுகின்றன” எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்குமுன், ஈரானின் அணுசக்தி ப்ராஜெக்ட்டுகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை Stuxnet எனப்படும் malware ஒன்று தாக்கி, சில மணி நேரம் செயலிழக்க வைத்தது. அந்த தாக்குதலை யார் செய்தது என்பதில் குழப்பம் நிலவுகிறது. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் ஆகியவை கூட்டு சேர்ந்து அந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியிருந்தது.தற்போது ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில், Stuxnet malware-ஐ விட வீரியமுள்ள கம்ப்யூட்டர் வைரஸ் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சவுதி, இஸ்ரேலிய உளவுத்துறைகள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி உளவுத்துறையின் தலைவர் இளவரசர் பந்தர் பின் சுல்தான், மொசாத் தலைவர் தமீர் பார்டோ ஆகிய இருவரும் சமீபத்தில் வியன்னா (ஆஸ்திரியா) நகரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் இந்த திட்டம் பற்றி பேசியதாகவும், இதற்காக சவுதி 1 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறுகிறது, ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி.இந்த விவகாரம் தொடர்பாக உளவு வட்டாரங்களிலும் ஒரு கதை அடிபடுகிறது.

சவுதி உளவுத்துறை தலைவர் இளவரசர் பந்தர் பின் சுல்தானும், மொசாத் தலைவரும் ஜோர்தான் நாட்டு அக்வாபா நகரில் ரகசியமாக சில தடவைகள் சந்தித்து கொண்டதாக போகிறது அந்தக் கதை. இந்தச் சந்திப்புகள் பற்றிய ரகசியம் மத்திய கிழக்கில் லேசாக கசிய தொடங்கிய பின்னரே, தமது சந்திப்பை வியன்னாவுக்கு மாற்றிக் கொண்டார்கள் என்றும் கூறுகிறார்கள்.மற்றொரு விஷயம், சவுதி அரச குடும்பத்துக்கு தெரியாமல் இளவரசர் பந்தர் பின் சுல்தான் மொசாத்துடன் இந்த டீலிங்கை செய்வதாகவும் ஒரு கதை உள்ளது. சவுதி முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் இந்த திட்டத்தை அறிந்தவுடன், இளவரசர் பந்தர் பின் சுல்தானை அழைத்து எச்சரித்ததாகவும், இஸ்ரேலிய உளவுத்துறையுடன் சவுதி உளவுத்துறை இணைந்து செயல்படும் விஷயம் வெளியே தெரியவந்தால், அதை சவுதி அரச குடும்பம் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் கூறப்பட்டதாம்.

எப்படியோ, உளவு வட்டாரங்களில் அடிபடும் பேச்சுக்களை பார்த்தால், ஈரானிய அரசு மீடியாவின் செய்தி உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

 

Web Design by Srilanka Muslims Web Team