சவுதி கவர்னர் கருணையால் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இந்தியர் விடுதலை - Sri Lanka Muslim

சவுதி கவர்னர் கருணையால் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இந்தியர் விடுதலை

Contributors

-துபாய்-

சவுதி அரேபியாவின் அசிர் மாகாண கவர்னரின் கருணையால் கொலை வழக்கில் கைதான இந்தியர் மன்னித்து விடுதலை செய்யப்பட்டுள்ள செய்தி வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முஹம்மது ஜாகிர். சில ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு சென்ற இவர் அசிர் மாகாணத்தில் உள்ள பெனி ஹம்ர் பாகுதியில் ‘ரோட் ரோலர்’ (சாலையின் கருங்கற்களை மிதித்து சமப்படுத்தும் வாகனம்) டிரைவராக வேலை செய்து வந்தார்.

 

சம்பவத்தன்று, அவர் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது வங்காள தேசத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி அந்த வாகனத்தின் முன்னால் விழுந்தார். அவர் மீது கனமான இரும்பு சக்கரங்கள் ஏறி இறங்கியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இச்சம்பவம் தொடர்பாக முஹம்மது ஜாகிர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். என் வாகனத்தின் முன்னால் அந்த தொழிலாளி விழுந்ததை நான் கவனிக்கவே இல்லை. எனினும், நிகழ்ந்த விபத்துக்காக நான் வருந்துகிறேன் என்று நீதிபதியிடம் முஹம்மது ஜாகிர் முறையிட்டார்.

 

இதனையடுத்து, இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரியால் (இந்திய மதிப்புக்கு சுமார் 50 லட்சம் ரூபாய்) இழப்பீடாக தந்து விட்டு இந்த கொலை வழக்கில் இருந்து விடுதலையாகி செல்லலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

 

ஆனால், ஏழ்மை நிலையில் இருந்த முஹம்மது ஜாகிரால் அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாததால், செய்யாத தவறுக்கு கொலை குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பரிதாப நிலையை அறிந்த சவுதியில் வாழும் சில இந்தியர்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றரை லட்சம் ரியால்களை நிதியாக திரட்டி பலியானவரின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்தனர்.

 

ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அவரது குடும்பத்தினர், ‘கோர்ட் உத்தரவுப்படி மொத்தமாக 3 லட்ச ரியால்களை தந்தால் சமரசத்துக்கு தயார். இல்லை என்றால் கோர்ட்டில் பார்த்து கொள்ளலாம் என்று கூறி விட்டனர்.

 

இதற்கிடையில், பலியான தொழிலாளியின் உடலில் ஏதோ ஒருவகை நச்சுப்பொருள் இருந்தததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

 

இறந்த வங்காள தேச தொழிலாளி அந்த நச்சுப்பொருளின் மயக்கத்தால் தள்ளாடி, சுய நினைவிழந்து ரோட் ரோலரின் முன்னால் விழுந்திருக்கக் கூடும். எனவே, அந்த கோணத்தில் இந்த வழக்கை பரிசீலித்து கருணை அடிப்படையில் என்னை விடுதலை செய்ய வேண்டும் என சவுதியில் வசிக்கும் இந்தியர் ஒருவரின் உதவியுடன் அசிர் மாகாண கவர்னரும் சவுதி இளவரசரருமான ஃபைசல் பின் கலித்-திடம் முஹம்மது ஜாகிர் மேல் முறையீடு செய்தார்.

 

இவ்வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசகர்களுடன் கலந்து விவாதித்த இளவரசர் ஃபைசல் பின் கலித், சவுதி சிறையில் இருந்து முஹம்மது ஜாகிரை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். தற்போது ‘உம்ரா’ யாத்திரைக்காக மதினா சென்றுள்ள முஹம்மது ஜாகிர் விரைவில் இந்தியாவுக்கு சென்று குடும்பத்தாரை சந்திக்க போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team