சவூதி அரேபியாவில் மெர்ஸ் தொற்றில் இறந்தவர்கள் எண்ணிக்கை 282 - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் மெர்ஸ் தொற்றில் இறந்தவர்கள் எண்ணிக்கை 282

Contributors

சவூதி அரேபியாவில் 2012ம் ஆண்டிலிருந்து ‘மெர்ஸ்’ எனப்படும் சுவாசப்பை தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 282 என்று அரசு உறுதி செய்திருக்கிறது.

இது முன்பு கருதப்பட்டதை விட 100 பேர் அதிகம் இறந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்த நெருக்கடியைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனங்களுக்குள்ளான, சவூதி அரேபியாவின் துணை சுகாதார அமைச்சர், சியாத் மெஸ்மிஷ், திங்கட்கிழமையன்று பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

 

“மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்” ( MERS) என்ற இந்தத் தொற்றால் சௌதி அரேபியாவில் இதுவரை 688 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் இருக்கிறார்கள் என்று அரசு கூறியது. முன்புவரை இந்த எண்ணிக்கை 575 என்றுதான் கூறப்பட்டுவந்தது.

 

இந்தத் தொற்றுக்கு சிகிச்சை ஏதும் இல்லை . இந்தத் தொற்றுக்குக் காரணமான வைரஸ் , சாதாரண சளியைத் தோற்றுவிக்கும் வைரஸைப் போன்றதுதான். ஆனால் இது தொற்றினால் இது நியுமோனியா மற்றும் சிறுநீரகம் செயலிழப்பது போன்றவைகளுக்கு இட்டுச்செல்லும்.

 

இந்த நோய்த் தொற்று, ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்டுகள்,துனிசியா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி,இத்தாலி,பிரிட்டன் மற்றும் சமீபத்தில் அமெரிக்கா என்று பல நாடுகளில் பரவியிருக்கிறது.

 

ஒட்டகங்களிலிருந்து இந்த வைரஸ் பரவுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

 

ஒட்டகங்களுடன் பணி செய்வோர்கள் முகமூடிகளை அணிந்து வேலை செய்யுமாறு சவூதி அரேபிய அரசு அறிவுரை கூறியிருக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team