சவூதி அரேபிய வரலாற்றில் முதல் முறையாக....! - Sri Lanka Muslim

சவூதி அரேபிய வரலாற்றில் முதல் முறையாக….!

Contributors

(iNNE) சவூதி அரேபிய வரலாற்றில் முதல் முறையாக, பெண் வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது கட்சிக்காரருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார்.

பயான் ஸஹ்ரான்  என்னும் பெயருடைய அப்பெண்மணி  கடந்த வியாழனன்று ஜெத்தாவிலுள்ள பொதுநீதிமன்றம் ஒன்றில் தன் கட்சிக்காரர் சார்பில் வழக்குரைத்துப் பேசியுள்ளார். தனது இந்த அனுபவம் மிகுந்த பரவசம் அளித்துள்ளதாக பயான் ஸஹ்ரான் தெரிவித்தார்.

சட்டம் படித்து வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ள பயான், சட்ட ஆலோசகராகப் பணியாற்றி பல்வேறு குற்றவியல், குடிமையியல் மற்றும் குடும்ப விவகாரங்களில் பங்களிப்பைச் செய்திருந்த போதிலும் வழக்கறிஞர் பயான் ஸஹ்ரான் கட்சிக்காரருக்குப் பகரமாக நீதிமன்றத்தில் தோன்றி வாதிட்டது இதுவே முதல் முறையாகும்.

தன்னுடைய சட்ட நிறுவனத்தை விரைவில் தொடங்க உள்ளதாகவும், ஊழியர் விவகாரங்கள், வணிகச் சிக்கல்கள் ஆகியவற்றைத் தீர்த்து வைக்க தான் ஆர்வங்காட்டுவதாகவும் பயான் ஸஹ்ரான் கூறினார். “குறிப்பாக, பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்” என்றும் பயான் கூறினார். “பெண் வழக்கறிஞர்களால் இந்த நாட்டின் நீதித்துறைக்குச் சிறந்த பங்களிப்பை நல்க முடியும்” என்று உறுதிபட கூறுகிறார் வழக்கறிஞர் பயான் ஸஹ்ரான்.

Web Design by Srilanka Muslims Web Team