சவூதி மன்னரை சந்திக்க ஒபாமா திட்டம் - Sri Lanka Muslim
Contributors

qout269

 

சவூதி மன்னர் அப்துல்லாவை அடுத்த மாதம் சந்தித்து பிராந்திய பாதுகாப்பு, இருதரப்பு நல்லுறவு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்து ஆலோசிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டுள்ளார்.

 

 

 

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக சவூதி அரேபியா விளங்கி வருகிறது. இந்நிலையில் ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தியது மற்றும் சிரியாவில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரில் நேரடியாக தலையிடாமல் இருந்து வருவது போன்ற அமெரிக்காவின் செயல்பாடுகளால் சவூதி அரேபியா அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

 

அதனையடுத்து அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இடையிலான நட்புறவை உறுதிப் படுத்தும் விதமாகவே அதிபர் ஒபாமா அந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

 

இந்த சுற்றுப் பயணத்தின்போது வளைகுடா நாடுகளுக்கான பொது நலன்கள் குறித்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு அளித்தல், சவூதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் யுக்திகளை வலுப்படுத்துதல்,

 

 

பிராந்திய பாதுகாப்பு, தீவிரவாத செயல்களை ஒடுக்குதல், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மன்னர் அப்துல்லாவுடன் ஒபாமா விவாதிக்க இருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜெய் கார்னே தெரிவித்துள்ளார். நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் ஒபாமா அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடந்த 2009ஆம் சுற்றுப்பயணம் செய்த ஒபாமா அப்போது சவூதிக்கும் சென்றிருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த மாதம் சவூதி அரேபியாவுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team