சாது சாது என்று ஆட்சிக்கு வந்த அரசு இன்று சூது சூது என்று கசினோ மந்திரம் ஓதுகிறது! - Sri Lanka Muslim

சாது சாது என்று ஆட்சிக்கு வந்த அரசு இன்று சூது சூது என்று கசினோ மந்திரம் ஓதுகிறது!

Contributors

பெளத்த விகாரைகளில் ஒலிக்கும் சாது, சாது என்ற மந்திரத்தை ஓதி, பெளத்த மதத்தை முன்னிலைபடுத்தி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று சூது, சூது என்ற சர்வதேச கசினோ மன்னன் ஜேம்ஸ்  பெக்கரின் மந்திரத்தை வேதவாக்காக ஓதுகிறது.

கொல்லப்படுவது தமிழர் தானே என்றும், அடிபடுவது முஸ்லிம் தானே என்றும் இந்த அலங்கோல அரசாங்கத்தின் அனைத்து அட்டகாசங்களுக்கும் துணையாக சிங்கள பெளத்த மக்களை உசுப்பி விட்டு அழைத்து சென்ற படுபாதக பாவச்செயல்களை, சம்பிக ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்த்தனவின் மஹஜன எக்சத் பெரமுன, குணதாச அமரசேகரவின் தேசிய தேசப்பற்று இயக்கம், கலகொட அத்தே ஞானசார தேரரின் பொதுபல சேன, ராவண பலய ஆகிய அமைப்புகளே செய்தன.

இன்று கசினோ கலாச்சாரத்துக்கு எதிராக நாட்டில் எழுந்துவிட்ட பாரிய எதிர்ப்பை கண்டு அரசாங்கமே தற்காலிகமாக பின்வாங்கிய நிலையில், சிங்கள பெளத்த மக்களின் கேள்விகளுக்கு, சிங்கள பெளத்த மக்களை உசுப்பி விட்ட, இந்த சிங்கள பெளத்த தீவிரவாதிகளால் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது. அப்பாவி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள், இன்று தங்கள் சொந்த இன மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி போய் நிற்கின்றார்கள். எங்களுக்கு எதிராக இவர்கள் செய்த பாவங்களுக்கு இவர்களே பதில் சொல்லும் அந்த “பதில் கூறும் நாள்” அண்மித்து கொண்டிருப்பதை இன்றைய நடப்புகள் துல்லியமாக படம் பிடித்து காட்டுகின்றன.

கொழும்பு நகரில் அமைக்கப்பட உள்ள இரண்டு கசினோ வலயங்கள் காரணமாக நாட்டிலும், அரசாங்கத்துக்குள்ளேயும் தோன்றியுள்ள சர்ச்சைகள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

“மதட தித” என்ற “மதுவுக்கு முற்றுப்புள்ளி” என்ற கருத்தை மகிந்த சிந்தனையில் சொல்லி, மது ஒழிப்பு பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து, ஆட்சிக்கு வந்த இந்த மகிந்த அரசாங்கம், 2006ம் வருடத்திலிருந்து முன்னூறு புதிய மதுபான அனுமதி பத்திரங்களை இதுவரை வழங்கியுள்ளது. இது இன்று நாடு முழுக்க மதுவெறி சார்ந்த கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் குற்றங்களை அதிகரிக்க செய்துள்ளது.

இன்று இதே மகிந்த அரசு ஒரு படி மேலே போய், சர்வதேச மாபியா கசினோ சக்கரவர்த்திகளை நாட்டுக்குள்ளே, செங்கம்பளம் விரித்து அழைத்து வருகிறது. இதன்மூலம் தொழில்ரீதியான போதை வஸ்து வர்த்தகம், விபச்சாரம், சர்வதேச சட்டவிரோத பண பரிமாற்றம், சர்வதேச கடத்தல்-சர்வதேச குற்றவாளி கும்பல்கள் ஆகிய அனைத்தும் கொழும்பு மாநகருக்கு உள்ளே மத்திய கொழும்பில் வந்து குவிவதற்கு இந்த அரசாங்கம் வழி ஏற்படுத்தியுள்ளது.

தன் பாவச்செயல்களுக்கு, அரசாங்கம் ஒரு வினோத காரணத்தை கண்டு பிடித்து நியாயம் கற்பிக்கிறது. இந்தியாவினதும், சீனாவினதும் புதிய அதிசெல்வந்தர்கள் இங்கே கசினோவை தேடி வந்து கோடிக் கணக்கில் பணத்தை கொட்டுவார்களாம். இந்த புதிய அதிசெல்வந்தர்களுக்கு ஏன் தங்கள் சொந்த நாடுகளிலேயே இந்தியாவும், சீனாவும் இத்தகைய சூது-களியாட்ட வலயங்களை அமைத்து கொடுக்கவில்லை என இந்த மகிந்த அரசாங்கம், இந்திய-சீன நாட்டு அரசாங்கங்களை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

அவுஸ்திரேலிய கசினோ மன்னன் ஜேம்ஸ் பெக்கர் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய்களை கொண்டு வந்து இங்கே முதலீடு செய்வது சுருட்டு வியாபாரம் செய்வதற்கு இல்லை. அதேபோல் இலங்கையின் பிரபல தனியார் வியாபார குழுமம் ஒன்று சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்வது கீரை வியாபாரம் செய்வதற்கு அல்ல. இந்த இலங்கை நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டு பங்காளர் யார் என்று இன்னமும் தெரியவில்லை. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இந்த மகிந்த அரசு, அடுத்த பத்து வருடங்களுக்கு “டெக்ஸ் ஹொலிடே” என்ற வரியில்லா வரி விடுமுறை வழங்குவதும், காரணம் இல்லாமல் இல்லை. இதன்மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் யாருக்கு தரகு பணமாக கை மாறுகின்றன என்பது வெகுவிரைவில் தெரியவரும். இதை நாம் வெகு விரைவில் அம்பலப்படுத்துவோம்.

இந்த இரண்டு சூதாட்ட கசினோ வலயங்களும் மத்திய கொழும்பில் அமையுள்ளன. ஜேம்ஸ் பக்கரின் கிரவுன் ஸ்ரீலங்கா சூதாட்ட வலயம் டீ.ஆர். விஜயவர்த்தன மாவத்தையில் லேக் ஹவுஸ் கட்டிடத்துக்கு எதிரே கொழும்பு பேர வாவியின் கிழக்கு கரையோரத்திலும், ஜோன் கீல்சின் சூதாட்ட வலயம் கொம்பனி தெரு கிலனி வீதியை ஒட்டிய பாரிய நிலபரப்பில் கொழும்பு பேர வாவியின் மேற்கு கரையோரத்திலும் ேஅமைய உள்ளன. அழிவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் குறைந்தபட்சமாக, மேலை நாடுகளில் இத்தகைய சூதாட்ட வலயங்கள், தனிதீவுகளிலும், பாலைவனங்களிலும் ஒதுக்குபுறமாக அமைக்கப்படுகின்றன.

இந்த குறைந்தபட்ச பொறுப்புகூட இந்த நாட்டின் மகிந்த அரசுக்கு கிடையாது. இந்நாட்டில் இந்த சூதாட்ட வலயங்கள் நாட்டின் மிகப்பெரும் நகரமான கொழும்பு நகரின் இதயப்பகுதியில் அமைக்கப்படுகின்றன. அதாவது சூதாட்டம், தொழில்ரீதியான போதை வஸ்து வர்த்தகம், விபச்சாரம், சர்வதேச சட்டவிரோத பண பரிமாற்றம், சர்வதேச கடத்தல்காரர்கள், சர்வதேச குற்றவாளி கும்பல்களின் நடத்தைகள்தான் இனி கொழும்பின் பிரபல தொழில்களாக மாறப்போகின்றன. இதன்மூலம் இந்நாட்டு சிங்கள பெளத்த மக்களை காப்பாற்ற அவதாரம் எடுத்துள்ளதாக சொல்லிக்கொள்ளும் இந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், நாட்டின் சிங்கள பெளத்த மனசாட்சியையும், ஆன்மாவையும் விலை பேசி விற்று வயிறு கழுவும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது தெளிவாகின்றது. அதாவது துடு கெமுனுவின் அவதாரம் இன்று “துஷ்ட கெமுனு” அவதாரமாக மாறியுள்ளது.

இதற்கு காரணம் நாட்டை விற்று வயிறு கழுவ வேண்டிய அளவுக்கு நாட்டின் நிதி நிலைமை, பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. இது ஒரு ஆரம்பம்தான். சிங்கள பெளத்த மேலாதிக்கம் என்ற பெயரில் இந்நாட்டில் பாரிய துன்பங்களுக்கு முகங்கொடுத்த தமிழ், முஸ்லிம் மற்றும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் இனி விரைவில் இன்னும் பற்பல புதுப்புது மகிந்த கண்காட்சிகளை, வீடுகளில் சாய்வு நாற்காலிகளில் அமர்ந்தவண்ணம், ஊடகங்களில் படித்தும், பார்த்தும், கேட்டும் ரசிக்கலாம் என்பதை இப்போதே சொல்லி வைக்கின்றேன்-TC

Web Design by Srilanka Muslims Web Team