சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழக கிரிக்கட் போட்டி : ஒரு லட்சம் பெறுமதியான உபகரணங்கள் வீரர்களுக்கு வழங்கி வைப்பு..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழக கிரிக்கட் போட்டி : ஒரு லட்சம் பெறுமதியான உபகரணங்கள் வீரர்களுக்கு வழங்கி வைப்பு..!

Contributors

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழக 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட சீருடை அறிமுக நிகழ்வும், சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியும் கழகத்தலைவர் ஏ.பாயிஸின் தலைமையில் சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை காலை பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மியண்டாட் இஸ்டல்லியன் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அந்த அணியை எதிர்த்து முதலில் துடுப்படுத்தாடிய  மியண்டாட் கெப்பிட்டல் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 109 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத நிலையில் மத்திய தர வரிசை வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தின் வாயிலாகவே இந்த ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மியண்டாட் இஸ்டல்லியன் அணியினருக்கு 110 எனும் வெற்றியிலைக்கை மியண்டாட் கேப்பிட்டல் அணி நிர்ணயித்தனர். ஆரம்ப துடுப்பாட்ட  இர்ஷாத் 56 ஓட்டங்களை குவித்ததுடன் மூன்றாவது  விக்கட்டுக்கான துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடிப்பாடினர். இதனால்  சிறப்பாக விளையாடிய மியண்டாட் இஸ்டல்லியன் அணி 13.2 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தனர். இந்த சுற்றுத்தொடரின் ஆட்ட நாயகர்களாக இஸ்டல்லியன்ஸ் அணியின் வீரர்களான றிஸ்னி மற்றும் இர்ஷாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடராட்ட நாயகராக கெப்பிட்டல் அணி வீரர் ரஜாத் தெரிவானார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த ஏ.எல்.எம். சலீம் வீரர்களுக்கு வழங்கி வைத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team