சாரதியின்றி ஓடிய ரயில் என்ஜின்.. பேயும் இல்லை, பிசாசும் இல்லை, - Sri Lanka Muslim

சாரதியின்றி ஓடிய ரயில் என்ஜின்.. பேயும் இல்லை, பிசாசும் இல்லை,

Contributors

-எம். எஸ். பாஹிம்-

சாரதி இல்லாமல் ரயில் என்ஜின் ஒன்று தன்னிச்சையாக சுமார் 15 கிலோ மீற்றர்கள் பயணித்த சம்பவம் என்ஜின் சாரதியினதும் உதவியாளரதும் தவறினாலே இடம்பெற்றுள்ளமை விசாரணை மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது. இது நாசகார வேலையோ பேயின் செயற்பாடோ அல்ல என இது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னிச்சையாக ரயில் இன்ஜினொன்று நடுநிசியில் பயணித்த சம்பவம் தொடர்பாக மூவரடங்கிய குழுவின் அறிக்கை நேற்று காலை போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கமவிடம் கையளிக்கப்பட்டது.

சம்பவ நேரம் கடமையில் இருந்த சன்டிங் என்ஜின் சாரதியும் உதவியாளரும் குற்றவாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக 11 பரிந்துரைகளும் முன்வைக்கப் பட்டுள்ளன.

தெமட்டகொட ரயில் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த என்ஜின் ஒன்று கடந்த 5ஆம் திகதி அதிகாலை தன்னிச்சையாக இரத்மலானை வரை பயணித்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் ஏ. டி. எச். செனவிரத்ன தலைமையிலான மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு 36 பேரிடம் வாக்குமூலம் பெற்றது.

உயர்மட்ட குழுவின் அறிக்கை கையளிக்கும் நிகழ்வு ரயில்வே திணைக்களத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, என்ஜின் சாரதிகயினதும் உதவியாளரதும் கவனயீனத்தினாலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என விசாரணை குழுவின் அறிக்கை மூலம் நிரூபணமாகியுள்ளது.

உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கையாளாது ரயிலை செயற்படுத்திவிட்டு சன்டிங் சாரதி இறங்கிச் சென்றுள்ள நிலையிலே ரயில் என்ஜின் சில நிமிடங்களில் தன்னிச்சையாகப் பயணித்துள்ளது. ரயில் என்ஜின் மருதானை, புறக்கோட்டை ஊடாக மணிக்கு 9.5 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளது.

என்ஜினை நிறுத்துவதற்காகச் சாரதியம் உதவியாளரும் ரயில் பாதை வழியே புறக்கோட்டை ரயில் நிலையம் வரை பின்னால் ஓடியுள்ளதோடு இது சி. சி. ரி. கெமராக்களில் பதிவாகியுள்ளன. ரயிலைப் பிடிக்க முடியாமல் சாரதியும் உதவியாளரும் திரும்பி வருவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இடையில் குழாயில் இவர்கள் நீரும் அருந்தியுள்ளனர்.

இது வேண்டுமென்று செய்ததல்ல. கவனயீனத்தினால் நடந்த தவறேயாகும். குழுவின் பரிந்துரைப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ரயில்வே பொது முகாமையாளர் வி. ஏ. பி. ஆரியரத்ன கூறியதாவது:-

இதற்கு முன் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருக்காததாலே இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடுநிசியில் நடந்ததால் நேரில் கண்ட சாட்சியங்களைக் பெறுவதில் சிக்கல் காணப்பட்டது. இதனால் குழுவின் அறிக்கை சற்று தாமதமானது. பலரது வாக்குமூலங்கள்

பெறப்பட்டதோடு தொழில் நுட்ப உதவியும் பெறப்பட்டது. ரயில் என்ஜினொன்றை நிறுத்துவது, செயற்படுத்துவது என்பன தொடர்பில் பாதுகாப்பு விதி முறைகளை கையாள வேண்டும். ஒரு என்ஜினுக்கு இருவர் சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.

என்ஜினிலிருந்து இறங்கிவ் செல்வதற்கு முன் அதனை நிறுத்தி பிரேக் இட்டு ரயில் சக்கரத்துக்கு தடுப்பு வைத்தே செல்ல வேண்டும். குறித்த சாரதி ரயிலை செயற்படுத்திவிட்டு இறங்கிச் சென்றதை விசாரணையின் போது ஏற்றுக் கொண்டுள்ளார்.

இரு குற்றவாளிகளுக்கும் எதிராக உரிய தண்டனை வழங்கப்படும். இரு வாரங்களில் இவர்களுக்கு எதிராக விசாரணைக் குழு நியமிக்கப்படும். எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துக்கள் நடைபெறாதிருக்க சகல வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

மருதானைக்கும் புறக்கோட்டைக்கு மிடையில் 84 சி. சி. ரி. வி. கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் போதிய ஆதாரங்கள் கிடைத்தன என்றார்.

விசாரணைக் குழுத் தலைவர் பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் செனவிரத்ன கூறியதாவது:-

விசாரணையின் ஆரம்பத்தில் சன்டிங் சாரதியும் உதவியாளரும் பொய்ச்சாட்சியே வழங்கினர். நள்ளிரவு நடந்த சம்பவம் என்பதால் எமக்கு போதிய ஆதாரங்கள் பெற முடியாதிருந்தது.

ஆனால் சி. சி. ரி. வி. கேமராவில் பதிவாகியுள்ள தகவல்களை காண்பித்ததையடுத்து சாரதியும் உதவியாளரும் தவறை ஏற்றுக் கொண்டனர்.

சம்பவ தினம் இரவு 10.30 மணியளவில் குறித்த டீசல் என்ஜினை சம்பவத்துடன் தொடர்புடைய என்ஜின் சாரதி ரயில் தரிப்பிடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ரயிலை இவர் செயலிழக்கச் செய்தாலும் உரிய முறையில் பிரேக்கை நிறுத்தாமலே இவர் சென்றுள்ளார்.

நள்ளிரவு 12.00 மணிக்கு 12.15 க்கும் இடையில் வைத்து குறித்த என்ஜினை அந்த இடத்தில் இருந்து அகற்றுமாறு சாரதிக்கு அறிவிக்கப்பட்டது. அந்தரயிலுக்கு பின்னால் நிறுத்தப்பட்டுள்ள என்ஜினை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காகவே இந்த அறிவிப்பு வழங்கப்பட்டது.

இதன்படி நள்ளிரவு 12.15க்கும் 12.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் சாரதி என்ஜினை செயற்படுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளார். பொதுவாக என்ஜின் செயற்பட 15 நிமிடம் வரைபிடிக்கும்.

ஆனால் குறித்த என்ஜினின் பிரேக்கை நிறுத்தி உரியபடி ஆரம்பத்தில் அதனை செயலிழக்கச் செய்திருக்காததால் அது 5 நிமிடங்களுக்குள் தானாக இயங்கி முன்னோக்கிச் சென்றுள்ளது. 12.42க்கு என்ஜின் மருதானையை அடைந்துள்ளதோடு 12.55க்கு புறக்கோட்டையை அடைந்துள்ளது. இரத்மலானையில் வைத்து குறத்த ரயில் சிரமத்துடன் நிறுத்தப்பட்டது. இது 1969ல் தருவிக்கப்பட்ட டீசல் என்ஜினாகும்.

எதிர்காலத்தில் இத்தகையை சம்பவங்கள் நடைபெறாது தடுக்க 11 சிபாரிசுகள் வழங்கியுள்ளோம். அதில் ரயில் தரிப்பிடத்திற்கு சி சி. ரி. வி. கெமரா பொருத்துதல், என்ஜின்களின் சுவிட்சுகளை மீளமைத்தல், என்ஜின்கள் இவ்வாறு செயற்படுகையில் கட்டுப்பாட்டுப் பிரிவில் சமிக்ஞை காட்டும் வகையில் புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தல், சன்டிங் சாரதிகளை இரவு வேலைக்கமர்த்தும் நடவடிக்கையை மறுசீரமைத்தல், இரவில் திடீர் சோதனைகளை முன்னெடுத்தல், அனுபவமுள்ள ஊழியர்களை கூடுதலாக கடமையில் ஈடுபடுத்தல் என்பன அதில் அடங்கும்.

சில ஊழியர்கள் 2, 3 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

 

Web Design by Srilanka Muslims Web Team