சிங்களத் தேசியத்தில் நிலைக்கும் சமர்; காலம் யாருக்கு கை கொடுக்கும்?-சுஐப் எம்.காசிம்- Sri Lanka Muslim

சிங்களத் தேசியத்தில் நிலைக்கும் சமர்; காலம் யாருக்கு கை கொடுக்கும்?-சுஐப் எம்.காசிம்-

Contributors

‘நாட்டின் இயல்புநிலை மீளத்திரும்புமா?’ என்ற ஐயம் நீங்கிவரும் நிலையில், மீண்டும் இதே ஐயம் ஏற்படுமளவுக்கு “ஒமிக்ரோன்” தொற்றிக்கொண்டு திரிகிறது. இந்த நீங்கலுக்கும் மீண்டும் ஏற்படலுக்கும் இடைப்பட்ட நாட்களில், தென்னிலங்கை அரசியல் சூடேறியிருந்தன. ஆட்சியை அகற்றிப் பார்ப்பதில் எதிரணியும், அதிகாரத்தில் நிலைப்பதில் ஆளுந்தரப்பும் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள், எதிர்காலத்துக் களத்தை நமது மனக்கண்களுக்கு காட்டியிருக்கின்றன. டொலர் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை, சிலிண்டர் வெடிப்பு, மின்சார நெருக்கடி எல்லாவற்றையும் அரசின் தலையில் சுமத்திய எதிரணி எந்தளவு வெற்றிகொண்டது? இதை ஆளுந்தரப்பு எவ்வாறு எதிர்கொண்டது? இந்தக் கேள்விகளின் விடைகளில்தான் இக்கட்சிகளின் எதிர்காலம் நகரப்போகிறது.
எதிரணியிலுள்ள வெடிப்புக்களும், திடுதிடென ஆட்சிக்கு ஆசைப்படும் நரைத்துப்போன கனவுகளும்தான் இதற்குள்ள பலவீனம். 2019லும் கூட விட்டுக்கொடுப்பு, விசால செயற்பாடுகளுடன் நடந்திருந்தால் இந்தளவு நிலை ஏற்பட்டிருக்காது என்கின்றனர் அரசியல் அவதானிகள். இப்போது கூட இதே பதறலும் பதற்றத்திலுமே இவ்வணியிருக்கிறது. 2025இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர்கள் வெளிப்படுகின்றனரே தவிர, இதற்கான வியூகங்களை இக்கட்சியில் காணவில்லை. சஜித், சம்பிக்க என்று இன்னும் எத்தனை வேட்பாளர்கள் வெளிப்பட்டு, வெடிப்புக்கள் ஏற்படப்போகிறதோ தெரியாது? இதற்குள் புகுந்துகொண்ட சிறுபான்மைக் கட்சிளுக்குத்தான் இப்போது அதிக கவலை பிடித்திருக்கும். தென்னிலங்கையில் மிளிரக்கூடிய தலைமை கிடைக்காதுவிட்டால், இன்னும் எத்தனை வருடங்களுக்கு அடையாளமிழக்க நேரிடும் இவர்களுக்கு? எனவே, ‘பிடித்த கொப்புக்கு பெறுமானமில்லை’ என்றாகப் போகிறதோ இவர்களது நிலை? தலைமைகள் ஓரங்கட்டப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சமூகங்கள்தானே சுமக்க நேரிடுகிறது. அதனால்தான் இந்தக் கவலை. எனவே, ‘எதிரணி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற யதார்த்தத்தை செயலுருவில் காட்ட வெளிக்கிளம்புவதே ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால், ஆளுந்தரப்பு இவ்விடயத்தில் இதுவரைக்கும் ஆரோக்கியமாகவே இருக்கிறது. “தம்பியுடையான் படைக்கு அஞ்சான்” இதைப் பார்க்கலாம் இத்தரப்பில். அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டாயிற்று. ஏலவே, வெளிக்கிளம்பிய தோழமைக் கட்சிகளின் சீண்டல்களும் சமாதியாகிவிட்டன. சொந்தக் கட்சிக்குள் ஏற்பட்ட கிசுகிசுப்புக்கு பதிலடியும் கிடைத்திருக்கிறது. இனியென்ன, பாதைகளுக்கேற்ப சாரதி வேகத்தைக் கூட்டிக் குறைப்பதைப் போன்று பயணத்தை வெளிக்கிடுவதுதான் இத்தரப்புக்குள்ள பாக்கி.
எத்தனையோ அரசியல் ஆரூடங்கள் கூறப்படும் நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் சேர்ந்துள்ள கூடாரந்தான் ஜோசியர்கள் இல்லாதுள்ளது. பதவிக்காலங்களை நீடிக்கப்போவதற்கான ஆரூடங்கள் அர்த்தப்படுமானால் இத் தலைமைகளின் கையறுநிலைமைகள் கவலைக்குள்ளாகலாம். பத்து வருட பூர்த்தியில்தான் பாராளுமன்ற ஓய்வூதியம் என்றிருக்கையில், எதிரணியிலுள்ள பாதிப் பேரே பக்கம் சாய்ந்துவிடலாம். இது ஏற்படின் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் எதிர்காலங்கள் எங்கே? என்ற சந்தேகங்கள்தான் இச்சமூக நேசர்களுக்கு எழும் கவலைகள்.
தமிழர்களுக்காக சர்வதேசம் பேசலாம். முஸ்லிம்களுக்காக எந்தத் தேசம் பேசுவது? எந்த ஆதாரங்கள் அல்லது ஆவணங்களின்படி நிலைமைகளை விளக்குவது? ஆகக்குறைந்த அதிகார அடையாளத்தையாவது அமுல்படுத்துமாறு மோடிக்கு எழுதப்பட்ட ஆவணத்திலிருந்து ஒதுங்கிய அல்லது பிரிய நேரிட்ட சந்தி எது என்பது, மக்களுக்கு தெளிவூட்டப்படாதது ஏன்? பிடிக்காமல் விலகியோர் வெளியிலிருந்து இதற்கு ஆதரவளிப்பதாகக் கூறுவதன் பின்புலங்கள் என்ன? இவைகள்தான், சிறுபான்மைக் களங்களின் இன்றைய எதிரொலிகள். இந்த அறைகூவலையாவது ஆவணமாக்கி, அர்த்தப்படும் அரசியலை ஆரம்பிக்க வேண்டிய காலங்களை கடத்திய இந்தக் கட்சிகள், இன்னும் காலங்களைக் கடத்தவா காத்திருக்கின்றன?
நாற்பது வருடங்கள் பரிணாமம் அடைந்துள்ள இந்தச் சிறுபான்மை அரசியல் பிரச்சினைக்கு, இனி நவீன சிந்தனையிலான தீர்வுக்கே முயற்சிக்க வேண்டும். வண்டில்களில் பயணித்த காலங்கள் கழிந்து கார்களில் விரையும் காலத்தில், வாழ்கையில் கிறவல் வீதியையா உரிமையாகக் கேட்பது? நிலத்துக்கான, இருப்புக்கான அல்லது அடையாளத்துக்கான அதிகாரங்களை அடைந்துகொள்ள அல்லது அர்த்தப்படுத்த புதுவழிகளில் சிந்திக்கவே புறப்பட வேண்டும். எவ்வடிவத்திலும் உரிமைகளைக் கைவிட்டதாக இவ்வழிகள் இருக்கப்போவதில்லை. தென்னிலங்கையும் இதே மனநிலையில் பயணிப்பதையே அவதானிக்க முடிகிறது.

Web Design by Srilanka Muslims Web Team