சிப்லி பாறுக் ஊடக அறிக்கை - Sri Lanka Muslim
Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் ஒரு ஊடக அறிக்கை ஒன்று 09 இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

தற்போது கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நஸீர் ஹாபிஸ் நியமனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் என்னை சம்பந்தப்படுத்தி பலதரப்பட்ட கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எனக்கிருக்கின்றது என்ற காரணத்தினால் இவ்வூடக அறிக்கையானது என்னால் வெளியிடப்படுகின்றது.

 

எமது நாட்டில் மொத்தமாக ஒன்பது மாகாண சபைகள் இருக்கின்ற நிலையில் அதில் ஏழு மாகாண சபைகள் பெரும்பாண்மைச் சமூகமான சிங்கள சமூகமும், வடமாகாண சபையானது தமிழ் சகோதரர்களின் அதிகப்படியான வாக்குகளும், செல்வாக்கும் இருக்கின்ற காரணத்தினால் அது எமது சகோதர இனமான தமிழ் சகோதரர் ஒருவராலும் ஆட்சி செய்யப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம்.

 

எம்முடைய முஸ்லிம் சமூகம் அதிகப்படியாக செறிந்துவாழும் ஒரு பிரதேசம் கிழக்கு மாகாணமாகும். இந்த மாகாணத்துக்குரிய முதலமைச்சராக வரவேண்டிய அனைத்து உரிமைகளும் மாகாணத்தில் பெரும்பாண்மையாக வாழும் எம் சமூகத்திற்கு இருக்கின்றது என்பதில் எவருக்கும் எவ்விதமாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது.

 

ஆகவே கிழக்கு மாகாண சபைக்கு ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்றால் அவர் எமது முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஒருவராக இருக்கவேண்டும் என்பது எம் சமூகத்தின் ஏகோபித்த ஒரு கருத்தாகும். இந்தவிடயத்தில் நான் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் காலத்திலிருந்து உறுதியாகவே இருந்து வந்திருக்கின்றேன்.

 

அதே நேரம் ஒருவிடயத்தினை இவ்விடத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தம் எனக் கருதுகின்றேன். அதாவது வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கில் இடம் பெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தல் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற போது முஸ்லிம் சமுகத்திற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்திருந்தும் அது வழங்கப்படாமல் முஸ்லிம் சமுகம் ஏமாற்றப்பட்ட வரலாரையும் இவ்விடத்தில் பதிவுசெய்து கொள்ளவிரும்புகின்றேன்.

 

கடந்த 2012 மாகாண சபைத்தேர்தலின் பின் கிழக்குமாகாணத்தின் முதலமைச்சர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்த சகோதரர் நஜீப் ஏ. மஜீட்டுக்கு வழங்கப்பட்டது.

 

அதன் பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்தின் காரணமாக புதியதொரு ஆட்சிமாற்றமொன்றினை கிழக்கு மாகாண சபையில் நிறுவுவதற்கான ஏற்பாடுகளையும் அனைத்து அரசியல் தலைமைகளும் மற்றும் அரசியல் கட்சிகளும் மேற்கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெறவேண்டுமாக இருந்தால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை உள்ளடக்கினால் தான் சாத்தியமாகும் என்கின்ற ஒருநிலைப்பாடு இருக்கிறது (இது சம்பந்தமான கணக்குவிபரம் கீழே காட்டப்பட்டுள்ளது.

 

ஏனென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணியினை ஆட்சி அமைப்பதற்காக யார் இணைத்துக் கொண்டாலும் அவர்களது கோரிக்கையாக முதலமைச்சர் பதவி தங்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்கள்.

 

அதேநேரம் இரு பக்கத்திலும் சரிசமனான அங்கத்தவர்களே காணப்பட்ட நிலையில் (என்னைஉள்ளடக்காமல்) முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்கும் நிலைப்பாட்டில் இருந்த நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கூட்டணிக்கு ஆதரவளிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சர் என்பது சாத்தியமாகும் என்றும் அதற்கு எதிராக செல்லுகின்றபோது இது தமிழ் சகோதரர்களுக்கு முதலமைச்சரை தாரைவார்த்துக் கொடுக்கவேண்டிய ஒருசூழல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் நான் எனது ஆதரவினை முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தரப்புக்கு எவ்வித நிபந்தனைகளும், எதிர்பார்ப்புகளுமின்றி சமுகநோக்கோடு என்னுடைய கட்சியினுடைய தலைமைத்துவத்துடனும் கூட கலந்தாலோசிக்காமல் எனது ஆதரவினை வழங்கினேன்.

 

அவ்வாறு தலைமையுடன் கலந்தாலோசனை செய்யாதது தவறாக இருந்தபோதிலும் அப்போதிருந்த மிக இக்கட்டான தருணத்தில் முஸ்லிம் முதலமைச்சரை பெறவேண்டும் என்ற எனது உறுதியான எண்ணத்தை கருத்தில் கொண்டு எம் சமுகத்தின் உரிமையொன்றினைப் பெறும் நோக்கில் தூய்மையான உள்ளத்தோடு அம்முடிவினை எனது பதவிற்குரிய அமானிதத்தினைப் பாதுகாக்கும் நோக்கில் எனது பூரண ஆதரவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அணியினருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து கொண்டே வழங்கினேன்.

 

ஆனால் இவ்வாறு நான் எனது ஆதரவைத் தெரிவித்த பின் எனது கட்சிக்குள் இருந்து எனது ஆதரவினை மீளப் பெறுமாறு மிகவும் வலுவான நெருக்குதல்கள் எனக்கு ஏற்பட்டபோதும் நான் எம் சமுகத்தின் நலன் கருதி முஸ்லிம் முதலமைச்சரொருவர் சாத்தியமான பக்கமே எனது ஆதரவு என்றும் இருக்கும் என்ற விடயத்தில் உறுதியாக இருந்தேன்.

 

மாற்றமாக எதிரணிக்கு ஆதரவளிப்பதன் மூலம் எனது கட்சியினூடாக எனது உயர்பீட உறுப்பினர்களிடத்திலும் மற்றும் காத்தான்குடியில் பொதுமக்களுடன் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் எனக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட அமைச்சுப் பதவியினைக் கூட சமூக நலன் கருதி நான் அதனைப் பொருட்படுத்தாமல் நான் எடுத்த முடிவில் மிகவும் தெளிவாக இருந்தேன்.

 

இருந்த போதிலும் எனது கட்சியின் தலைமையிடமிருந்தும் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களிடமிருந்தும் எனக்கு ஆதரவினை மீளப்பெறுமாறு தொடர்ச்சியான நெருக்குதல்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ச்சியாக அங்கம் வகிப்பதா என்கின்ற ஒரு கேள்வி எனக்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது.

 

 

தற்போதைய முதலமைச்சர் தெரிவு தொடர்பான விளக்கக் குறிப்பு கீழே கொடுக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு–14ஆசனங்கள் தேசிய காங்கிரஸ் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உள்ளடங்களாக

 

தமிழர் விடுதலைக் கூட்டணி – 11 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்– 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி– 4 ஆசனங்கள்
தேசிய சுதந்திர முன்னனி– 1 ஆசனங்கள்
மொத்த ஆசனங்கள்– 37 ஆசனங்கள்
முதலமைச்சரை தெரிவு செய்யும் போதிருந்த கூட்டு:
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன் ஒரு உறுப்பினர் நீக்கலாக) – 13ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஒரு உறுப்பினர் நீக்கலாக) -06 ஆசனங்கள் மொத்தமாக -19 ஆசனங்கள்.

 

இது ஆட்சியமைக்க போதுமான எண்ணிக்கையாகும்.

 

இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான் வெளியேறும் பட்சத்தில் இக்கூட்டணி பின்வரும் ஒழுங்கில் அமையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன் இரு உறுப்பினர் நீக்கலாக) -12ஆசனங்கள்

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஒருஉறுப்பினர் நீக்கலாக)-06ஆசனங்கள் மொத்தமாக-18 ஆசனங்கள். இவ்வெண்ணிக்கையினைக் கொண்டு ஆட்சியமைக்க முடியாதுபோகும்.

 

இச்சந்தர்ப்பத்தில் நான் எனது சம்மதத்தினை எதிரணிக்கு வழங்கும் பட்சத்தில் அது தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஒருவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்துவதற்காக நான் அளித்த வாக்காகமாறிவிடும். அதனால் தான் என்னுடைய ஆதரவினை நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டுக்கு வழங்கி ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெற உதவி செய்தேனே தவிர வேறு எந்த சுய நலங்களும் கிடையாது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team