சிறுநீரக கடத்தலின் பிரதான தரகர் – தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடி அம்பலம்!

Read Time:4 Minute, 3 Second

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோசடி சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து சிறுநீரகங்களை பணத்திற்கு வாங்கி வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரகக் கடத்தலின் பிரதான தரகராக மோதரை காஜிமாவத்தையைச் சேர்ந்த ஒருவரெனவும் தெரிய வந்துள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த நபர் வேறொரு தரகரால் அமர்த்தப்பட்டுள்ளதாகவும்,தலா பத்து இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கஜிமாவத்தை, தொட்டலங்கை மோதரை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேரை குறித்த நபர் இணைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், நாட்டில் வெளிநாட்டினருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி ஆவணங்கள் ஊடாக இந்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீரகம் தானம் செய்யும் போது சம்பந்தப்பட்டவர்கள் கிராம உத்தியோகத்தர்களின் சான்றிதழ்களை பெற வேண்டியதன் பின்னணியில் வைத்தியசாலையின் ஒரு குழுவினர்  போலியான சான்றிதழ்களை தயாரித்து வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டினருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும், ராஜகிரியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் வெளிநாட்டவர் ஒருவருக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தமக்கு சிறுநீரகத்திற்காக 120 முதல் 50 இலட்சம் ரூபா வரை பணம் வழங்கப்படுவதாக வாக்குறுதியளித்ததாகவும், இருப்பினும் கூறியது போன்று  பணம் வழங்கப்படவில்லை எனவும் சிறுநீரகத்தை வழங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, சிறுநீரகக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை ஒழுங்குமுறைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Previous post அபின் உள்ளிட்ட அபாயகர ஔடதங்கள் திருத்தச் சட்டம் இன்று முதல் நடைமுறை!
Next post இலங்கையில் இன்று முதல் அமுலாகும் மரண தண்டனை!