சில நாட்டு ஹச் யாத்ரீகர்களுக்கான விசாவுக்கு இடைக்காலத் தடை - Sri Lanka Muslim

சில நாட்டு ஹச் யாத்ரீகர்களுக்கான விசாவுக்கு இடைக்காலத் தடை

Contributors

சியாரா லியோன் உட்பட, கினியா, லைபீரியா நாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு வரும் முஸ்லிம் யாத்ரீகர்களின் பயண விசா அனுமதிகளுக்கு சவுதி அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

 

கடந்த ஜனவரி மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எபோலா என்ற இரத்தசோகை நோய் காய்ச்சலால் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் இதுவரை 78 பேர் இறந்துள்ளதாக சர்வதேச தொண்டு அமைப்பான எல்லையில்லா மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

 

 

அங்கு இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 122 என்று அரசுத்தரப்பு குறிப்பிட்டுள்ளது. வெப்பமண்டல வைரஸ் தாக்கத்தினால் தோன்றும் இந்த நோயில் தசை வலி, வாந்தி, இரத்தப்போக்குடன் கூடிய காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

 

 

கினியாவின் எல்லைப் பகுதியான சியரா லியோனிலும் பரவியுள்ளதாகக் கருதப்படும் இந்த நோய்த்தொற்று முன்னெப்போதும் இந்தப் பகுதிகளில் காணப்படவில்லை என்று மருத்துவத் தொண்டு அமைப்பு குறிப்பிடுகின்றது.

 

 

இதனைத் தொடர்ந்து இந்த நோய்த்தொற்றின் தன்மை மற்றும் வேகமாகப் பரவும் அபாயம் கருதி சவுதி அரேபியாவின் சுகாதர அமைச்சகம் மேற்கொண்ட கோரிக்கையின் பேரில் சியாரா லியோன் உட்பட, கினியா, லைபீரியா நாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு வரும் முஸ்லிம் யாத்ரீகர்களின் பயண விசா அனுமதிகளுக்கு சவுதி அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

 

ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் வாழும் முஸ்லிம் மக்கள் தங்களின் ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதியில் உள்ள மெக்கா, மதீனா நகரங்களுக்கு விஜயம் செய்வது வழக்கம்.

 

 

அதுபோன்று ஆண்டுதோறும் அவர்கள் இங்கு சிறிய அளவிலான புனிதப் பயணங்களையும் மேற்கொள்ளுகின்றனர்.

 

 

எனவே, பாதுகாப்பு நடவடிக்கையை முன்னிட்டு நோய்த்தாக்கம் உள்ள பகுதி மக்கள் பயணம் செய்வதையோ, வர்த்தகத் தொடர்புகளை மேற்கொள்ளுவதையோ தவிர்க்குமாறு உலக சுகாதார அமைப்பும் கேட்டுக்கொண்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team