சீதுவை பிரதமகுரு படுகொலை - விமான நிலையத்தில் 18 வயது பிக்கு கைது! - Sri Lanka Muslim

சீதுவை பிரதமகுரு படுகொலை – விமான நிலையத்தில் 18 வயது பிக்கு கைது!

Contributors

சீதுவையில் உள்ள விகாரை ஒன்றில் 50 வயதுடைய பிக்கு ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 18 வயது தேரர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (15) அதிகாலை EK 649 எனும் விமானம் மூலம் துபாய் நோக்கி புறப்படவிருந்த நிலையில், குறித்த தேரர் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் சீதுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (14) பிற்பகல் சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேத்தேவ நந்தாராம விகாரையில் இருந்து துர்நாற்றம் வீசுவது குறித்து தமக்கு தகவல் கிடைத்ததாகவும், விசாரணைக்காக பொலிஸ் குழுவொன்று அங்கு சென்ற போது, அங்கு எவரும் இருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 50 வயதான விகாரையின் நாயக்க தேரர் பயன்படுத்திய அறை வெளியில் பூட்டப்பட்டிருந்ததையும், அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதையும் பொலிஸ் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

பூட்டை உடைத்து அறைக்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரிகள், குறித்த தேரர் அவரது கட்டிலில் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணமடைந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த தேரரின் கண்கள் கட்டப்பட்டு , வாய்க்குள் துணி அடைக்கப்பட்ட நிலையில் முழு உடலும் காவி உடையால் மூடப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விகாரையின் தலைமை தேரரான நெதகமுவ மஹானாம தேரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விகாரையில் மற்றுமொரு துறவி வசித்து வருவதாகவும், அவர் யாருக்கும் தெரிவிக்காமல் வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தேரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமன்றி, குறித்த விகாரையில் இருந்த டிபென்டர் வாகனமொன்றும் வெகன் ஆர் வகை கார் ஒன்றையும் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தேரரின் சடலத்தை நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பித்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்க, நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

குறித்த விகாரைக்குச் சென்று நேரில் ஆய்வு செய்த பின்னர் பதில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team