சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4.34 லட்சமாக அதிகரிப்பு - Sri Lanka Muslim

சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4.34 லட்சமாக அதிகரிப்பு

Contributors

உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

எய்ட்ஸ் தினம் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது.

அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லட்சங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லட்சம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதப்படுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லட்சம் உயிரிழப்பு ஏற்பட்டது. இதில் 2,70,000 குழந்தைகள்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எய்ட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். இதனையொட்டி, கடந்த 25 ஆண்டுகளாக டிசம்பர் 1ம் தேதியை உலக நாடுகள் எய்ட்ஸ் தினமாக கடைபிடித்து வருகின்றன.

இந்நிலையில், மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடாக விளங்கும் சீனாவில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் புதியவர்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவர்களையும் சேர்த்து அந்நாட்டின் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சீனாவில் உள்ள 31 மாகாணங்களிலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் தற்போது 2 லட்சத்து 9 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team