சீன உர கம்பனிக்கு 6.9 மில் டொலரை செலுத்தியது மக்கள் வங்கி! - Sri Lanka Muslim

சீன உர கம்பனிக்கு 6.9 மில் டொலரை செலுத்தியது மக்கள் வங்கி!

Contributors

சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 6.9 மில்லியன் டொலர்களை (USD 6,873,975) , மக்கள் வங்கி இன்று (07) செலுத்தி விட்டது என அந்த வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதன உரம், உரிய தரத்தில் இல்லாத நிலையில், அதனை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதனால் குறித்த உரம் கப்பலில் இருந்து இறக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மக்கள் வங்கி தெரிவித்துள்ளதாவது,

தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டதாகக் கூறப்படும் சீன சேதன உரக் கப்பலுக்கான கொடுப்பனவை தடுப்பது தொடர்பாக, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு கடந்த திங்கட்கிழமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

Qinqdao Seawin Biotech Group Company Limited எனும் சீன நிறுவனத்திடமிருந்து குறித்த சேதன உரமானது Ceylon Fertlizer Company Limited மற்றும் Colombo Commercial Fertilizer (pvt) Limited ஆகிய நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்டதற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட கொள்வனவு கோரிக்கைக்கமைய, குறித்த கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் குறித்த சேதன உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக காணப்படுவதாக சோதனைகளில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, அதனை ஏற்றி வந்த கப்பலை இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து, இலங்கை உர நிறுவனம் இது தொடர்பில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பில் குறித்த உரத்தை விநியோகிக்கும் Qingdao Biotech Group Co. Ltd. எனும் சீன நிறுவனம் மற்றும் இலங்கையிலுள்ள அதன் முகவர் நிறுவனம் மற்றும் அவற்றுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி ஆகியவற்றுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சீன நிறுவனத்திற்கான கொடுப்பனவை இடைநிறுத்தியமை தொடர்பில், மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலில் இணைத்துள்ளதாக, இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிவித்திருந்தது.

இதன் பின்னர், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து SLSI தரநிர்ணயங்களுக்கு இணங்க சேதன உரத்தை மீள் உற்பத்தி செய்யுமாறு அந்நிறுவனத்திடம் கோரப்பட்டிருந்தது.

சட்ட மாஅதிபரின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்திருந்ததுடன், SLSI தரநிர்ணயங்களுக்கு இணங்க சேதன உரத்தை மீள் உற்பத்தி செய்யுமாறு அந்நிறுவனத்திடம் கோரப்பட்டிருந்தது.

அதனையடுத்து, தரமான உரத்தை மீள வழங்குவதன் அடிப்படையில், இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீன சேதன உர நிறுவனத்திற்கான கொடுப்பனவை தடுப்பது தொடர்பாக, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team