சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயமும் உலக நாடுகளின் அவதானமும்!

Read Time:10 Minute, 35 Second

இப்புத்தாண்டில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தன் ஐந்து நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். கிழக்கு ஆபிரிக்கா, கென்யா, எரித்ரியா ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்யும் அவர், மாலைதீவுக்கும் இலங்கைக்கும் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார். இவ்வாண்டில் இலங்கை வரும் முதல் வெளிநாட்டு உயர்மட்ட அரசியல் பிரமுகர் இவராகவே இருப்பார்.

சீனா இலங்கையின் நட்பு நாடு என்ற வகையிலும், இலங்கையில் பெருமளவு முதலீடுகளைச் செய்திருக்கும் நாடு என்ற வகையிலும் வெளிவிவகார அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இலங்கை அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது. இதேசமயம் இவ்விஜயத்துக்கான அரசியல் மற்றும் இராஜதந்திர காரணங்கள் எவையாக இருக்கக் கூடும் என்ற ஊகம் இப்பிராந்திய வட்டாரங்களில் எழுந்துள்ளது. நிச்சயமாக இந்தியா இப்பயணத்தை வெகு உன்னிப்பான கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்பது மிகையல்ல. குவாட் நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் கவனத்தையும் இப்பயணம் ஈர்க்கவுள்ளது.

இழுபறியில் இருந்து வந்த திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு சுமுகமான முடிவு காணப்பட்டு 61 குதங்களை 51 – 49 பங்குகள் என்ற அடிப்படையில் புதிய நிறுவனமொன்றின் கீழ் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேசமயம் இலங்கைக்கு இந்தியா பெருமளவு டொலர்களைக் கடனாக வழங்கவும் முன்வந்துள்ளது.

சமீப காலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்திருப்பதோடு, பொருளாதார ரீதியான உடன்பாடுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது இந்தியா இலங்கையில் சமீப காலமாக மேற்கொண்டு வரும் நகர்வுகளுக்கு மாற்றாக தமது அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் இவ்விஜயத்தின் பின்னணியாக அமையலாம் என்பது அரசியல் அவதானிகளின் ஆருடமாக உள்ளது.

இவ்விஜயம் வழமையானது, பரஸ்பர கௌரவத்தை மேலும் உயர்த்துவது என்றெல்லாம் இராஜதந்திர வார்த்தைப் பிரயோகங்கள் சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை விளக்குவதற்கு பயன்படுத்தப்பட்டாலும், இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஸென்ஹொங்கின் சமீபகால நடவடிக்கைகளையும் இவ்விஜயத்தோடு பொருத்திப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. சமீப காலமாக இலங்கையின் உள்விவகாரங்களில் அவர் தன் ட்விட்டர் பதிவுகளில் கருத்து தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்து உலர் உணவுப் பொருட்கள், நூல்கள் என்பனவற்றை வழங்கியதோடு தமது உதவும் பணி தொடரும் எனவும் கூறியிருந்தார். அவர் தலைமன்னார் சென்று அங்கிருந்து இராமர் பாலத்தையும் பார்வையிட்டார். கடந்த மாத இறுதியில் தென்மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். சீனத் தூதுவர் இவ்வாறான விஜயங்களை மேற்கொள்வதும் மக்களை சந்திப்பதும் முன்னர் நிகழாதவை.

பருத்தித்துறைக்கும் இராமர் பாலத்துக்கும் அவர் மேற்கொண்ட விஜயங்களும் உபயோகித்த சொற்களும் இந்தியாவுக்கு சமிக்ஞைகளை விடுத்ததாகவே இராஜதந்திர ரீதியாக அறியப்படுகிறது. இத்தகைய சூழலிலேயே சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வருகிறார்.

இலங்கையின் நெருங்கிய நண்பனான சீனாவின் உயர்மட்ட அமைச்சரின் வருகை என்றும், சீன – இலங்கை இறப்பர் ஒப்பந்தம் நிகழ்ந்து 70 ஆண்டுகள் ஆகின்றமை, சீன – இலங்கை இராஜாந்திர உறவு ஏற்பட்டு 65 ஆண்டுகளாகின்றமை என்ற வகையிலும் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்பட்டாலும், இவ்விரு நாடுகளுக்கு இடையே காணப்படும் சில பிரச்சினைகளைத் தீர்ப்பதும் இப் பயணத்தின் நோக்கமாக இருக்கலாம்.

சீன – இலங்கை உறவில் சீன உரக்கப்பல் விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது கண்கூடு. உரம் ஏற்றி வந்த கப்பலில் உள்ள உர மாதிரி பரிசோதிக்கப்பட்டதும், அதில் காய்கறி விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நுண்ணுயிர்கள் இருப்பதாக தெரியவந்ததையடுத்து அக்கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதும், அக்கப்பல் திரும்பிச் செல்லாமல் களுத்துறைக்கு அப்பால் கடலில் தரிந்து நின்றதும் நாம் அறிந்தவையே.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அக்கப்பலில் இருந்த உரம் பாவனைக்கு உதவாது என்பது நிரூபணமான பின்னரும் இலங்கை சீனத் தூதரகம் விடாப்பிடியாக நடந்து கொண்டதாகும். இது தூதரக இராஜதந்திரத்துக்கு உவப்பானதாக இருக்கவில்லை என்பதாகும். அக்கப்பலில் வந்த உரத்துக்கான கொடுப்பனவை செலுத்துவதற்கு மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் தடை விதித்ததும் சீனத் தூதரகம் ஆத்திரமடைந்து மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்து பழி தீர்த்துக் கொண்டது.

மக்கள் வங்கி செய்ததெல்லாம் நீதிமன்றக் கட்டளைக்கு அடிபணிந்தது மட்டும்தான். ஒரு நட்பு நாட்டின் அரச வங்கியை கறுப்புப் பட்டியலில் அதுவும் நீதிமன்ற தீர்ப்பின்படி நடந்த ஒரு வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதும் சீன வர்த்தகர்கள் அவ்வங்கியை பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பதும் இராஜதந்திர உலகில் நல்ல முன்மாதிரி அல்ல. தற்போது அத்தடை நீக்கப்பட்டு கொடுப்பனவு வழங்கப்பட ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந் உரம் மீளவும் இலங்கைக்கு வருமா என்று தெரியவில்லை. விவசாயிகளால் நிராகரிப்புக்கு உள்ளாகியுள்ள ஒரு சேதனப் பசளைக்கு விலை கொடுக்கப்படும் போது அது மக்களின் பணம் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல இலங்கை அரசாங்கம் மின்சார உற்பத்தியின் பொருட்டு யாழ்ப்பாணத்தை அண்டிய மூன்று தீவுகளில் சீனாவுக்கு இடம் அளிக்க சம்மதம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்தியாவின் அழுத்தத்தையடுத்து அத்திட்டத்தை சீனா கைவிட வேண்டியதாயிற்று. இவ்விடயத்தில் இ்நதியாவின் அச்சங்கள் நியாயப்படுத்தக் கூடியவையே.

பருத்தித்துறை கரையில் நின்றபடி “இந்தியா இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கும்?” என்று சீனத் தூதர் வினவியதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். மேலும் கொழும்பு துறைமுகத்தில் சில ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குவதாக வெளியான தகவலையடுத்து துறைமுக தொழிற்சங்கங்களும் ஜே.வி.பியும் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன. அக்காணி தொடர்பாக இதுவரை முடிவு எட்டப்பட்டதாகத் தெரியவில்லை. இவை தவிர, கொழும்பு துறைமுக நகரம், இன்னும் திறக்கப்படாமல் விடப்பட்டிருக்கும் தாமரைக் கோபுரம் உட்பட சில விஷயங்களில் பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிகிறது. இவற்றைப் பற்றி பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதை முதன்மையாகக் கொண்டே சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை வருகை அமைகிறது என்று அவதானிகள் கருதுகின்றனர்.

இலங்கை சீனாவின் நட்பு நாடு மாத்திரமல்ல, இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனா முன்னெடுக்கவுள்ள கடல் பட்டுப்பாதை திட்டத்தில் இலங்கை ஒரு முக்கிய இடத்தை வகிப்பதாகவே சீனா கருதுகிறது. இதற்கு எதிராகவே அமெரிக்காவின் தலைமையில் ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. எனவே இலங்கையின் உறவு சீனாவுக்கு பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13 ஆவது நினைவு தினம் இன்று!
Next post PTA கைதிகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு காலக்கெடு விதித்த HRCSL!