சோக சம்பவத்தை வைத்து ஈரான் அரசியல் நடத்த முயற்சிக்கிறது -சவுதி குற்றச்சாட்டு - Sri Lanka Muslim

சோக சம்பவத்தை வைத்து ஈரான் அரசியல் நடத்த முயற்சிக்கிறது -சவுதி குற்றச்சாட்டு

Contributors
author image

World News Editorial Team

சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது மக்கா அருகேயுள்ள மினா நகரில் கடந்த 24–ந்தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பலியாகினர்.

850–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் பலர் உயிரிழந்தனர். இதனால் நேற்று பலியானோர் எண்ணிக்கை 769 ஆக உயர்ந்தது.

இந்த தகவலை சவுதி அரேபியா சுகாதார துறை மந்திரி காலித் அல் பாலிஹ் தெரிவித்தார். இதற்கிடையே, இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கையும் 22 ஆக அதிகரித்துள்ளது.

மினாநகரில் சாத்தான் மீது கல்லெறியும் இடத்திற்கு சென்ற 2 பெரிய யாத்ரீகர்கள் குழுக்கள் இடையில் மோதிக் கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து நடந்ததாக சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.

இதை சவுதிஅரேபியாவின் எதிரி நாடான ஈரான் மறுத்துள்ளது. நிர்வாக திறமையின்மையே இச்சம்பவத்துக்கு காரணம் என குற்றம் சுமத்தியுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஈரானை சேர்ந்த 136 பேர் உயிரிழந்துள்ளனர். 102 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இவர்கள் தவிர ஹஜ் பயணம் சென்றிருந்த மேலும் 344 ஈரானியர்களை காணவில்லை. அவர்கள் லெபனான் முன்னாள் தூதர் கசான்பர் ரோக்னாபடியும் ஒருவர். அவர்களின் கதி என்ன என்று தெரிய வில்லை. அவர்கள் குறித்து சவுதி அரேபிய அரசு பட்டியல் வெளியிடவில்லை என ஈரான் துணை வெளியுறவு மந்திரி ஹுசேன் அப்துல்லாகின் டெலிவிஷன் பேட்டியில் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஈரான் அரசு வக்கீல் ஜெனரல் இப்ராகிம் ரைசி கூறும் போது, ‘‘சவுதி அரேபியா ஹஜ் பயணிகளுக்கு எதிராக குற்றம் இழைத்துள்ளது. எனவே, அந்நாட்டின் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடருவோம் இது கவனக் குறைவாக நடந்தது அல்ல. இது ஒரு பெரும் குற்றம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ஈரானின் குற்றச்சாட்டை சவுதி அரேபியா அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி அதெல் அல்–ஜுபெயர் கூறும்போது, மத கடமையாற்ற வந்தவர்களுக்கு நேர்ந்த சோக சம்பவத்தை வைத்து ஈரான் அரசியல் நடத்த முயற்சிக்கிறது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team