சௌதியில் கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி - Sri Lanka Muslim

சௌதியில் கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி

Contributors
author image

BBC

/சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் கால்பந்தாட்ட போட்டிகளில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜெட்டா நகரில், வெள்ளியன்று, நடைபெற்ற ஒரு கால்பந்தாட்ட போட்டியைக் காண பெண்கள் குடும்பத்தினருடன் அதிக அளவில் வந்திருந்தனர்.

“பெண்களை விளையாட்டு மைதானங்களில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்கிறார்கள்,” எனும் பொருள்படும் ஹேஷ்டேக் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.

பெண்கள் அதிக அளவில் வருவதை ஊக்குவிக்க அவர்களது கலாசார உடையை தங்கள் அணி வீர்கள் அணியும் சீருடைகள் நிறத்தில் சில கால்பந்து மன்றங்கள் வழங்கின.

அங்கு வெள்ளியன்று, பெண் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக கார் விற்பனையகம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சௌதி பெண்கள் வாகனம் ஓட்ட இருந்த தடை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விலக்கப்பட்டு, வரும் ஜூன் மாதம் முதல் பெண்களும் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.

சௌதி அரசின் சட்டங்களின்படி வேலைக்குச் செல்லும் பெண்களும், பயணம் மேற்கொள்பவர்களுக்கு கட்டாயம் ஆண் துணை இல்லாமல் வெளியே வரக்கூடாது. பெரும்பாலும் உணவு விடுதிகளில்கூட ஆண்கள் அமர்வதற்கு மற்றும் குடும்பத்துடன் வருபவர்களுக்கு என இரு பிரிவுகளே இருக்கும்.

குடும்பத்தின் ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் தனியாக வர அங்கு அனுமதியில்லை.

கடவுசீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிப்பது, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது, வங்கிக் கணக்கு திறப்பது, திருமணம் செய்துகொள்வது, சில தொழில்களை தொடங்குவது, அவசர சிகிச்சை அல்லாத அறுவை சிகிச்சை செய்வது, சிறையை விட்டு வெளியேறுவது உள்ளிட்டவற்றை பெண்கள் செய்ய குடும்ப ஆண்களின் அனுமதி அவர்களுக்கு கட்டாயம் தேவை.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்கள், அந்நாட்டின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் சௌதியை ஒரு மிதவாத நாடாக மாற்றும் முயற்சிகளின் ஓர் அங்கமாகும்.

பல பத்தாண்டுகளாக அங்கு திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த டிசம்பர் மாதம் நீக்கப்பட்டது. எனினும், மத குருக்கள் மற்றும் பழமைவாதிகளிடையே அதற்கு எதிர்ப்பு நிலவுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team