
ஜனாதிபதியிடம் கிழக்கு ஊடக சங்கம் கருணை மனு
சிகிரியா குன்றுக்குச் சுற்றலா சென்ற வேளையில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை நீதவான் நீதிபதியினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சித்தாண்டியைச் சேர்ந்த செல்வி சின்னத்தம்பி உதயசிறி எனும் ஏழைத் தமிழ் யுவதியை பொது மன்னிப்பளித்து விடுதலைசெய்யுமாறு மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களைக் கோரும் அவசர காருண்ய மனுவொன்றை கிழக்கு ஊடக சங்கம் இன்று (10.03.2015) காலையில் தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் பொதுச் செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள இக்காருண்ய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டி எனும் இடத்தைச் சேர்ந்த செல்வி. சின்னத்தம்பி உதயசிறி எனும் 27 வயதான ஏழை யுவதி சிகிரியா ஓவியக் குன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த சமயத்தில் அங்குள்ள பாதுகாக்கப்பட்ட புனித பகுதியில் அவரது பெயரை எழுதினார் என்கிற குற்றச்சாட்டில் 14.02.2013ம் திகதி கைது செய்யப்பட்டு, தம்புள்ள நீதவான் நீதிமன்றத்தில் 65381ம் இலக்கத்தில் வழக்குத் தொடரப்பட்டு, கடந்த 02.03.2015ம் திகதி இரண்டு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றார் என்கிற துக்ககரமான செய்தியை இந்நாட்டு மக்களின் தந்தையாகப் பார்க்கப்படும் தாங்களும் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகின்றோம்.
தந்தையை இழந்துள்ள இந்த யுவதி, தனது கண்பார்வையற்ற வயோதிகத் தாயை தனது அன்றாட உழைப்பின் மூலமே பராமரித்து வரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நீதிமன்றம் வழங்கிய தீர்;ப்பின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் இவரது பிரிவானது, இந்த வயோதிகத் தாயாரையும் மிகவும் பாதிக்கச் செய்துள்ளதுடன், திருமணமாகாத இந்த ஏழை யுவதியின் எதிர்கால வாழ்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு நாம் சமர்ப்பிக்கின்றோம்.
நாட்டின் சட்டதிட்டங்களைச் சரிவர அறிந்திராத அவரது அறியாத்தனம் காரணமாக நிகழ்ந்திருக்கும் இத்தவறினை, இதற்கு முன்னரும் பலர் மேற்கொண்டு எச்சரிப்புக்களுடனான விடுதலையைப் பெற்றுள்ளனர் என்பதைக் கவனத்திற்கொண்டு, இந்த யுவதிக்கும் தங்களின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் பொது மன்னிப்பளித்து, அவரதும், அவரது பராமரிப்பின் கீழ் வாழும் வயோதிகத் தாயாரினதும் எதிர்கால வாழ்வினைச் சீர் செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் எமது கிழக்கு ஊடக சங்கம் தங்களைக் வேண்டிக் கொள்கின்றது.
நீதித்துறையில் முதல்தடவையாக இவ்வாறு மேற்கொள்ளும் குற்றச்செயல்களுக்கு எச்சரித்து விடுதலை செய்கின்ற, அபராதம் விதிக்கின்ற அல்லது ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை வழங்கி விடுவிக்கின்ற பலவாறான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற போதிலும், இந்த ஏழை யுவதி முதல் தடவையிலேயே குற்றவியல் சட்டத்தின் அதியுச்ச தண்டனையைப் பெற்றிருப்பதானது எம்மை மாத்திரமன்றி, இந்நாட்டில் வாழுகின்ற மனிதாபிமானமுள்ள இதயங்களையும் வருத்தமடையச் செய்துள்ளது.
இந்த மாணவியின் குடும்ப சூழலையும், அங்கு நாளாந்தம் சிந்தப்படும் பெற்றாரின், உறவினர்களின், அயலவர்களின் கண்ணீரையும் நேரில் கண்டபோது எமக்கும் நெஞ்சு வலிக்கின்றது. இதற்கு மேலும் நீதித்துறையின் கருணையை எதிர்பார்க்காது தங்களுக்கு தென்னிலங்கை வாழ் மக்களுடன் இணைந்து எமது மட்டக்களப்பு மாவட்ட மக்களாலும், வட கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களாலும் மனமுவந்து வழங்கப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஆணையைப் பயன்படுத்தியே இந்த ஏழை யுவதியை விடுவித்து வெளிக்கொண்டு வர முடியும் என்கிற ஒரே நம்பிக்கையின் அடிப்படையில் இக்கருணை மனுவை தங்கள் முன் சமர்ப்பிக்கத் தீர்;மானித்தோம்.
எனவே எமது மனங்களில் வாழும் இந்நாட்டின் நல்லாட்சி நாயகரான தாங்கள், தங்கள் முன்னுள்ள அத்தனை முக்கிய பணிகளுக்கும் முன்னதாக சிறையில் எத்தகைய உதவியுமின்றி வாடும் இந்த யுவதிக்கு கருணையுடன் கூடிய பொதுமன்னிப்பை அளித்து அவரை உடனடியாகச் சிறையிலிருந்து விடுதலை செய்யும் மேலான பணிப்பை வழங்குமாறு தாட்சண்யத்துடன் கேட்டுக் கொள்கின்றோம் என இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது