ஜனாதிபதியின் "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்..! - Sri Lanka Muslim

ஜனாதிபதியின் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்..!

Contributors

நூருள் ஹுதா உமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணத்தில் உருவான “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட வரிப்பத்தான் சேனை -01, இறக்காமம் -02, 04, 05, 06, 07 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.

வீடற்ற குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுப்பதனூடாக எல்லோரது வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் புதிதாக நிர்மானிக்கப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆறு இலட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளதோடு ஏனைய தொகையினை மக்கள் பங்களிப்போடு பிரதேச தனவந்தர்களின் நிதி மற்றும் பொருள் பங்களிப்புடன் மீதி தொகை வழங்கப்பட்டு இவ்வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

நிரந்தர வீடில்லாத, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, பெண் தலைமைதாங்கும், சமுர்த்தி பெறும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன.

இவ் அடிக்கல் நடும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷானும், விஷேட அதிதிகளாக வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட முகாமையாளர் ஏ.பி. யரங்கனி, இறக்கமாம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட்
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், வீடமைப்பு அதிகார சபை தொழிநுட்ப உத்தியோகத்தர் எம். ஷாக்கீர் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் இறக்காமம் – 05 ஆம் பிரிவில் வருமானம் குறைந்த பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாபின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team