ஜனாதிபதியின் சந்திப்பினூடாக ட்ரம்பினுடனான பிணக்கு பற்றி உலகுக்கு எடுத்துரைத்த ஈரான்.....! - Sri Lanka Muslim

ஜனாதிபதியின் சந்திப்பினூடாக ட்ரம்பினுடனான பிணக்கு பற்றி உலகுக்கு எடுத்துரைத்த ஈரான்…..!

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஈரானுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி முஹம்மட் ஷரீப் அனீஸ் அவர்கள் “சண்டே டைம்ஸ்” ஆங்கில வார இதழுக்கு வழங்கிய நேர்காணலின் சுருக்கம் .

( தமிழில் — ஏ.எச்.எம்.பூமுதீன்)

கேள்வி: இந்த சந்திப்பின் பயன்கள் என்ன?

பதில் : இது அரசியல் ராஜதந்திர உறவில், பொருளாதார ரீதியில் மற்றும் கலாச்சார ரீதியில் ஒரு புதிய அத்தியாயத்தை இரு நாடுகளுக்கிடையேயும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானிய ஜனாதிபதி கலாநிதி ஹஸன் ரூஹானி மற்றும் ஈரானின் அதியுயர் மார்க்க தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கொமைனி ஆகியோரை சந்தித்தார். இரு நாடுகளதும் பூகோள அமைவிடமானது தற்போதைய உலக அரசியல் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றில் பாரிய தாக்கத்தை செலுத்தக்கூடியதாக உள்ளது என இருதரப்பும் ஏற்றுக்கொண்டது.

இருநாடுகளுக்குமிடையிலான தற்போதைய வர்த்தக உறவானது தேவையைவிட மிகக்குறைந்த அளவில் காணப்படுவதாக ஈரானிய தரப்பால் கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்குமிடையிலான உறவை மேம்படுத்துவது எனவும் ஆகக்குறைந்தது 2011ம் ஆண்டில் காணப்பட்டவாறாகவாவது உயர்த்துவது என இணங்கப்பட்டது.

இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், நேரடி வெளிநாட்டு முதலீடுகள், விவசாயம், விஞ்ஞான தொழில்நுட்பம், விவசாய கைத்தொழில் மற்றும் புகையிரத சேவை போன்ற தலைப்புகளிலும் பேச்சுக்கள் இடம்பெற்றன

கேள்வி : இச்சந்திப்பு தொடர்பில் சர்வதேசத்தின் கவனம் எப்படியானது?

பதில் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச அணுவாயுத ஒப்பந்தமான JCPOA இலிருந்து விலகியதன் பின்னரான வெளிநாட்டு தலைவர் ஒருவரின் ஈரானுக்கான முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேசம் இவ்விஜயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கின்ற அதேவேளை, இரு நாட்டு தலைவர்களின் நிலைப்பாடுகளும் மிகவும் அவதானமாக கவனிக்கப்படுகின்றது.

ஈரான் இச்சந்திப்பை தனக்கு மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளும் என்பதுடன் தனது நிலைப்பாட்டை இச்சந்திப்பினூடாக சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஈரானின் அரசியல் மற்றும் ஆன்மீக இரு தரப்பும் தமது அரசியல் நிலைப்பாட்டை உலகுக்கு அறிவிக்க இச்சந்திப்பை ஒரு தளமாக பயன்படுத்திக்கொண்டனர்.

மேலும் ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் கொமைனி கூறுகையில் “ஆசிய நாடுகள் தமக்கிடையே ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஒரு வலுவான நிலையில் இருக்க முடியும்” என்றார்.

அதேவேளை ஈரான் ஜனாதிபதி கலாநிதி ஹஸன் ரூஹானி இது தொடர்பில் பகிர்ந்துகொண்ட விடயம் மிக முக்கியமானது. அவர் கூறுகையில், “
வெளிநாட்டுக்கொள்கையானது அறநிலை மற்றும் சர்வதேச நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈரான் செய்துகொண்ட எந்தவொரு ஒப்பந்தத்திலும் அதன் கடப்பாட்டை இஷ்டப்பட்டு பின்பற்றி வந்திருக்கின்றது.

அதேவேளை இதேவகையான ஒரு தரப்பாக நாங்கள் கொண்டிருந்த அமேரிக்கா எங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பதை மிக மனவருத்தத்துடன் நோக்குகின்றோம். அத்துடன் அமெரிக்காவின் இவ் அறிவிப்பானது தர்மத்துக்கும், அரசியலுக்கும், முறையான ராஜதந்திரத்துக்கும் மற்றும் சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கும் பங்கமானதாகும்” என்றார்.

இதனாலேயே இந்த அரச விஜயத்தை, ஈரான் அதனுடைய அண்மைக்கால அணுசக்தி தொடர்பான நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிப்பதற்கான நியாய சபையாக பயன்படுத்த முனைந்ததாக அவதானிக்கப்படுகின்றது.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணுசக்தி தொடர்பான விடயங்களில் எந்தவிதமான பாரிய கருத்துக்களையும் தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்துகொண்டார். ஜனாதிபதி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலேயே அதிக கவனத்தை செலுத்தினார். இலங்கை எந்தவொரு வல்லரசுடனும் எந்தவொரு உடன்படிக்கைமூலமாகவும் கட்டுப்பட்டதல்ல என்பதுடன் எல்லா நாடுகளுடனும் நல்ல உறவினை கொண்டுள்ளது என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

கேள்வி : ஒப்பந்தங்கள் ஏதும் இடம்பெற்றனவா?

பதில்: எங்களால் ஈரானுடன் 5 வேறுபட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடக்கூடியதாக இருந்தது.

1- சுகாதாரம், வைத்திய விஞ்ஞானம், மருந்து தயாரிப்பு மற்றும் வைத்திய உபகரணங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

2- தரநிர்ணயம், வானிலை ஆராய்ச்சி ஒத்துழைப்பு தொடர்பாக, ஈரானிய தரநிர்ணய மற்றும் கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் ( ISIRI ) இலங்கை தரநிர்ணய நிலையத்துக்கும் ( SLSI ) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

3- சட்டவிரோதமான தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களின் வியாபாரத்துக்கெதிரான போரில் ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4- சினிமா மற்றும் தொலைகாட்சி விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

5- கலாச்சார நிகழ்வுகள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மிக விரைவில் தெஹ்ரானில் இடம்பெறவுள்ள இருநாடுகளுக்குமிடையிலான 12வது இணைந்த பொருளாதார வேலைத்திட்டத்தில் பொருளாதார , வர்த்தக மற்றும் தொழில்நுட்பப்பொறியியல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்படும் என நான் திடமாக நம்புகிறேன்.

கேள்வி : ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி தொடர்பில் ஆராயப்பட்டதா?

பதில் : ஈரான் இலங்கைக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு விடயத்தில் இலங்கைக்கு முதன்முதலில் உதவிய நாடு ஈரான் என்பது பேச்சுவார்த்தையின்போது மேற்க்கோள்காட்டப்பட்டது. இலங்கையிலுள்ள எண்ணெய் மூலங்களை கண்டுபிடிப்பதற்கு உதவி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானை வேண்டிக்கொண்டார்.

கேள்வி : இருதரப்பு வர்த்தகம் தொடர்பில் என்ன ஆராயப்பட்டது?

பதில் : இருதரப்பும் எண்ணெய் வியாபாரம், பெற்றோலிய கனிய வளம், கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் தொடர்பில்

பல்வேறுபட்ட பிரச்சனைகளை ஆராய்ந்தனர். ஈரானிய கம்பெனிகள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் இலங்கைக்கு அணைக்கட்டுகள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்கள் அதேபோன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி புகையிரத பாதை நிர்மாணம் கிராமங்களுக்கு மின்சக்தி வழங்கல் தொடர்பில் தொழில்நுட்பப்பொறியியல் ரீதியான சேவைகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், விஞ்ஞான, மருத்துவ துறையில் மற்றும் மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்குதல் தொடர்பில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவது என இருநாட்டு தலைவர்களிடையே உடன்பாடு எட்டப்பட்டது.

தெஹ்ரான் மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி விமான சேவை, இலங்கையிலிருந்து ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி இருநாடுகளுக்கிடையில் வங்கிப்பரிவர்த்தனை தொடர்பில் புதிய பொறிமுறையை கையாளுதல் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இருதரப்பு வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பவற்றுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய வங்கிப்பொறிமுறை அவசியம் என இருதரப்பும் இணங்கிக்கொண்டது.

Web Design by Srilanka Muslims Web Team