'ஜெனிவாவில் முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில் மிகக்குறைவான ஆதரவே எமக்கு கிடைக்கும்' - அலி சப்ரி! - Sri Lanka Muslim

‘ஜெனிவாவில் முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில் மிகக்குறைவான ஆதரவே எமக்கு கிடைக்கும்’ – அலி சப்ரி!

Contributors

UNHRC – இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின்  கூட்டத்தொடரில் முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில், இலங்கைக்கு  மிக்க குறைவான ஆதரவே  கிடைக்கும், அதற்கான இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையுடன் இணங்கப்போவதில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.உண்மைகளை கண்டறியும் பொறிமுறை அவசியம் எனவும், அது உள்ளக பொறிமுறையாக அமைய வேண்டும் எனவும்  தெரிவித்துள்ள அவர்,  உண்மைகளை கண்டறியும் விதமாக உள்ளக பொறிமுறையை உருவாக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இது குறித்த பொறிமுறை ஒன்றினை உருவாக்க அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்  சட்டத்தில்  தேவையான மாற்றங்களை செய்துள்ளதாகவும், இச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 200க்கும் அதிகமானவர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இம்முறை பிரேரணையில், பொருளாதார குற்றங்கள் குறித்து தெரிவித்துள்ள போதிலும், பொருளாதார விடயங்களை சுட்டிக்காட்டும்  உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை என தெரிவித்த அமைச்சர், இலங்கைக்கு எதிராக மேலும் மேலும் குற்றங்களை சுமத்தி, இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளவே சர்வதேச தரப்பு முயற்சிப்பதாகவும், பிரிவினையினை வலுப்படுத்தும் பிரதான இரண்டு நாடுகளே இந்த முயற்சிகளின் பின்னணியில் இருந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரின் நிறைவுப் பகுதியில் பங்கேற்பதற்காக,  ஜெனிவாவிற்கு பயணமாகியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாளைய தினம் (6)  இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், இன்று காலையில் ஜெனிவாவில் இருந்து சூம் தொழிநுட்பம் மூலமாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

 எதிர்வரும் 07ஆம் திகதி கூட்டத்தொடர் நிறைவுபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team