ஜெனீவாவில் வெளியிடப்பட்டது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆவணப்படம் - 360 பக்கங்களைக் கொண்ட அறிக்கையும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தூதுவரிடம் நேரடியாக கையளிப்பு - Sri Lanka Muslim

ஜெனீவாவில் வெளியிடப்பட்டது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆவணப்படம் – 360 பக்கங்களைக் கொண்ட அறிக்கையும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தூதுவரிடம் நேரடியாக கையளிப்பு

Contributors

மிதும்கான்

இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை உள்ளடக்கிய ஆவணப்படம் நேற்று (2021.03.12) ஜெனீவாவில் வெளியிடப்பட்டது.

“The Tearful Trail” – கண்ணீர் நிறைந்த பாதை என்ற இந்த ஆவணப்படம் இலங்கை முஸ்லிம்கள் அன்று தொடக்கம் இன்று வரை எதிர்நோக்கிய சகல பிரச்சினைகளையும் உள்ளடக்கி சுமார் 40 நிமிட ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவை தளமாகக்கொண்டு இயங்கும் Universal Human Rights Council அமைப்பின் தலைவர் முயீஸ் வஹாப்தீன் இந்த ஆவணப்படத்தை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியும் தூதுவருமான நசீமா பக்லி மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிட இணைப்பாளர் டேவிட் வலி உள்ளிட்ட பலருக்கு ஜெனீவாவில் நேரடியாக கையளித்தார்.

மனித உரிமைகள் பேரவையின் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கும் இந்த ஆவணப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் இவ்வேளையில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை கூறும் ஆவணப்படமொன்று சமர்பிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

அது மாத்திரமன்றி இலங்கை சிறுபான்மையினர் எதிர்கொண்ட சவால்களை உள்ளடக்கிய “Declared and Undeclared Wars Against Minorities” என்ற சுமார் 360 பக்கங்களைக் கொண்ட அறிக்கையும் இவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வு நடைபெற்று வரும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கோஷங்கள் பல நாடுகளாலும் முன்வைக்கப்பட்டிருப்பதோடு தீர்மானமும் முன்மொழியப்பட்டிருப்பதோடு அதற்கான வாக்கெடுப்பும் விரைவில் நடைபெறவுள்ளது.

இதில் 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் வாக்குகள் இதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஆவணப்படம் மற்றும் தொகுக்கப்பட்ட அறிக்கை சமர்பிக்கப்படுவது இலங்கை சிறுபான்மையினரின் விடிவுக்கு உறுதுணையாக அமையும் என எதிர்பாரக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team