
ஜெய்லானியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலையில்
Read Time:3 Minute, 3 Second
ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள கூரகல பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வு நடவடிக்கைகளின் போது கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளின் எச்சங்கள் ஆய்வுகளுக்காக பிரித்தானிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கூரகலவில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களை ஆய்வு செய்வதற்காக பிரித்தானிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு தொல்பொருள் திணைக்களம் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. அவ் அழைப்புக்கேற்ப பிரித்தானியாவிலிருந்து வந்த அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகள் தொல்பொருள் திணைக்களத்திடம் இல்லாத காரணத்தினாலேயே எலும்பு எச்சங்களை பிரித்தானியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக தொல்பொருள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நிமல் பெரேரா தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஆய்வு மற்றும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் மனித எலும்பு எச்சங்கள் எந்த யுகத்துக்குரியவை என இனம் காண முடியுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகம் 125ஆவது வருடாந்த கந்தூரியை நடத்துவதற்கும் இம்மாதம் 31ஆம் திகதி கொடியேற்றும் நிகழ்வினையும் ஏற்பாடு செய்துள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் மலிக் ஷா தெரிவித்தார்.
தொல்பொருள் ஆய்வு பணிகளுக்காக பள்ளிவாசல் தவிர்ந்த பள்ளிவாசலுக்குச் சொந்தமான ஏனைய கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுவிட்ட நிலையில் கந்தூரி வைபவத்தை முன்னிட்டு மூன்று தினங்களுக்கு விஷேட கூடாரங்களை அமைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு பள்ளிவாசல் நிர்வாகம், பாதுகாப்புச் செயலாளர் கோதபாயராஜபக்ஷ மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கூடாரங்கள் கந்தூரி வைபவத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படவுள்ளது. (vidi)
.