ட்ரம்பை கைது செய்து ஒப்படைக்குமாறு, ஈரான் விடுத்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது..!

Read Time:2 Minute, 52 Second

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பட 48 அதிகாரிகளை கைதுசெய்யுமாறு கோரி ஈரான் இன்டர்போலுக்கு சிவப்பு அறிவிப்பு கோரிக்கையை விடுத்துள்ளது.

ஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசெய்ன் எஸ்மெய்லி நேற்றையதினம் செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி (ஐ.ஆர்.ஜி.சி) ஜெனரல் காசெம் சோலைமணி படுகொலை செய்யப்பட்டமைக்காக ட்ரம்ப் மற்றும் 47 அமெரிக்க அதிகாரிகளை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியே ஈரான் சர்வதேச பொலிஸான இன்டர்போலிடம் இந்த சிவப்பு அறிவிப்பு கோரிக்கையை விடுத்துள்ளது.

ஈரான் குடியரசு இந்தக் குற்றத்திற்கு உத்தரவிட்ட மற்றும் நிறைவேற்றியவர்களை தொடரவும் தண்டிக்கவும் மிகவும் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் கீழ் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படையினர் கடந்த 2020 ஜனவரி 03 ஆம் திகதி நடத்திய ட்ரோன் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கை குழுவுக்கு தலைமை தாங்கிய ஈரானின் உயர்மட்ட ஜெனரல் சோலைமணி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலையானது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில தற்போது ட்ரம்ப் உள்ளிட்ட 48 பென்டகன், அமெரிக்க அதிகாரிகளை கைதுசெய்யுமாறு வலியுறுத்திய ஈரானின் இரண்டாவது கோரிக்கை இதுவாகும்.

கடந்த ஜூன் மாதத்தில், தெஹ்ரான் வழக்கறிஞர் அலி அல்காசிமெர் ட்ரம்ப் உள்ளிட்ட பல அமெரிக்க அதிகாரிகளுக்கு “கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை” எதிர்கொள்வதாக கூறி பிடியாணை பிறப்பித்தார்.

எனினும் பிரான்சை தளமாகக் கொண்ட இன்டர்போல் ஈரானின் கோரிக்கையை நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous post தவிர்க்க முடியாத காரணத்தால் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது..!
Next post ஜனாஷா நல்லடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது, தொடர்ந்து தகனம் செய்யப்படும் – சுகாதார அமைச்சர்..!