தமிழ்க் கூட்டமைப்பின் இரட்டை வேடம் அம்பலம் என புத்தி ஜீவிகள் குற்றச்சாட்டு! - Sri Lanka Muslim

தமிழ்க் கூட்டமைப்பின் இரட்டை வேடம் அம்பலம் என புத்தி ஜீவிகள் குற்றச்சாட்டு!

Contributors

கொள்கைக்காக அரசியல் என்றவர்கள்

பதவிகளுக்காக குத்துவெட்டு

மக்கள் நலன் கருதி அரசின் கரங்களை இறுகப்பற்ற கோரிக்கை

(எம். சுஐப்)

கொள்கைக்காகவே தாம் அரசியல் நடத்துவதாகவும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது இலக்கு எனப் போர்க்கொடி தூக்கியும் அரசியல் நடத்தியவர்கள் இன்று அமைச்சுப் பதவிகளுக்கு ஆலாய்ப் பறப்பது விந்தையானது என புத்தி ஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமெனவும் அபிவிருத்தி அரசியல் ஒருபோதும் விடிவு தரப் போவதில்லை எனவும் மேடைகளில் கூறித் திரிந்தவர்கள் இன்று மாகாண சபை அமைச்சுப் பதவிகளுக்காக குடுமிச் சண்டையில் ஈடுபடுவது ஏனென்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் போது இது இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எனவும் இதில் எங்களுக்கு எத்தகைய ஆர்வமோ அக்க றையோ கிடையாதென நழுவல் போக்குடன் செயற்பட்ட கூட்டமைப்பு, இலங்கைக் குடியரசின் யாப்பின் கீழான 13வது சீர்திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கும் அந்தச் சபைகளின் அமைச்சுப் பதவிகளுக்கும் ஆலாய்ப் பறப்பதேன்? என்றும் அவர்கள் கேள்விக்கணை எழுப்புகின்றனர்.

வடக்கு – கிழக்கு பிரிப்புக்கு பின்னர் கிழ க்கு மாகாண சபைக்கென முதன் முதலாக நடந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட கூட்டமைப்பு அதன் பின்னர் நடைபெற்ற மாகாண சபையில் பங்கேற்று முஸ்லிம் காங் கிரஸ¤டன் இணைந்து ஆட்சி அமைக்கத் துணிந்த மர்மம்தான் என்ன? தமிழ்க் கூட்டமைப்பு காலத்துக்குக் காலம் தமது கொள்கைகளை மாற்று வதற்கு என்ன காரணம்?

பாராளுமன்றத்தில் ஒரு கருத்து, கருத்தரங்குகளில் வேறொரு கருத்து. வடக்கு – கிழக்கில் இன்னுமொரு கருத்து, இது தானா கூட்டமைப்பின் அடிநாதக் கொள்கை. தேர்தலின் பின்னர் கூட்டுக் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லை. ஆளை ஆள் மேடைகளில் விமர்சிப்பதும் மாறி மாறி அறிக்கை விடுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் தாறுமாறாக விமர்சித்து விட்டு கொழும்பு வந்து சலுகைகளுக்காக தாஜா பண்ணுவது என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழ்த் தலைவர்கள் கொழும்பில் ஒரு கதையையும் யாழ்ப்பாணத்தில் இன்னுமொரு கதையையும் சொல்லுவதை கைவிடுவதே புத்திசாலித்தனம் என புத்தி ஜீவிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீரிய வழிகாட்டலில் இழந்த வடக்கு – கிழக்கை கட்டியெழுப்பி மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதே காலத்தின் தேவையாகும் எனப் புத்திஜீவிகள் கூறுகின்றனர்.

வடக்கைக் கட்டியெழுப்ப கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழுள்ள வட மாகாண சபை முன்னின்று உழைக்க வேண்டுமென புத்தி ஜீவிகளும் தமிழ் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமது சுயலனுக்காகவும் கட்சி அந்தஸ்துக்காகவும் முரண்பட்டுக்கொண்டும் கொள்கைகளை மாற்றிக்கொண்டும் செயற்படத் துணிந்தவர்கள் மக்களின் நலன் கருதி தமது கொள்கைகளில் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் வடக்கு புத்திஜீவிகள் பலர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தனர்.

-Tinakaran

Web Design by Srilanka Muslims Web Team