
திராவிடரின் தலைவிதியில் வங்கக்கடலும் வடகடலும்! சுஐப்.எம்.காசிம்-
பாக்கு நீர் பரப்பு இந்திய,இலங்கை அரசியலில் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு வரலாறு. இவ்விரு நாடுகளின் நட்புக்கு வரலாற்றுக் காரணங்களும் இந்த நீரிணையுடன்தான் நீடிக்கிறது. நட்புக்கு இந்நீரிணை பிரதானம் வகிப்பது போலவே முரண்பாட்டுக்கும் முக்கியத்துவம் வகிக்கிறது. இலங்கையின் உள்நாட்டுப் போரில் ஆயுத அமைப்புக்களுக்கு இதனூடான போக்குவரத்தே பலம் சேர்த்தது. ஆயுதம், நிதி, அனுதாபம் மற்றும் அனுசரணைகளை எல்லாம் இந்த அமைப்புக்கள் அள்ளிக்கொண்டதும் இந்த நீரிணைப் பாதையூடாகத்தான். அரை மணி நேரப்பயணத்தில் ஈழத் தமிழர்கள் தொப்புள்கொடி உறவின் தொட்டிலடிக்கே சென்றுவிடுவர். திராவிடரின் இந்த அரை மணிநேரப் பயணம்தான் இலங்கையின் ஆரிய இனத்துக்கு ஆபத்தென வரப்போகும் அத்தனை ஆட்சியாளர்களுக்கும் ஜே.ஆர்.ஜெயவர்தன எச்சரித்தார். இந்த எச்சரிப்பின் எச்சங்கள் தென்னிலங்கையில் இன்னுமுள்ளன.
ஆனால், திரவியம் தேடுவதில் திராவிடத் தொப்புள்கொடி உறவுகள் உடையும் நிலைக்கு வந்துள்ளதுதான் கவலை. ஏனெனில், வயிற்றுப் பிரச்சினை திராவிடரின் தேசியத்தைப் பலமிழக்கச் செய்யும் நிலைக்கு வந்துவிடுமே! இவ்வாறு வரவிடாமல் பாதுகாப்பதில் தமிழக அரசியல்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், அத்துமீறும் தமிழக படகுகளில் அதிகமானவை அரசியல்வாதிகளுடையதாக இருப்பதால்தான். வயிற்றுப் பிழைப்புக்களுக்காக இப்படகுகள் வருவதாகவும் இல்லை. இந்தியாவின் உள்ளூர்ச் சந்தைகள் பலவற்றைக் கையகப்படுத்தும் மிகப்பெரிய வியாபாரம் இதிலிருக்கிறது. மும்பை, டில்லி, லக்னோ, கோவா, கொல்கத்தா மற்றும் குஜராத் சந்தைகளில் கொட்டி விற்குமளவு இந்த அரசியல் பிரபலங்களுக்கு மீன்கள் தேவைப்படுகின்றன.
மேற்சொன்ன வட இந்திய நகரங்களிலுள்ள மீனவர்களால் இவ்வளவு தொகையான மீன்களைப் பிடிக்க முடியாது. பாகிஸ்தான் போன்ற அயல் நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் செல்வதிலுள்ள பாதுகாப்பு எச்சரிக்கைகளும் இதிலுள்ள காரணங்களில் ஒன்று. தமிழக மீனவர்களுக்கும் இதில் சிரமங்கள் இருப்பதால்தான் இலங்கையின் வடகடலை நோக்கி வருகின்றனர். பாகிஸ்தான் படையினரிடம் மாட்டினால் வாழ்வின் அரைவாசியை அல்லது ஆயுள் முழுவதையும் அங்கேயே கழிக்க நேரிடுமே! இலங்கையில் இந்நிலைமைகள் இல்லை. அகப்பட்ட அடுத்த கணமே அழுத்தம் வந்து விடுதலையாகலாம். இப்பலவீனங்கள்தான் தொப்புள்கொடியினரின் உட்புகலை இங்கு அதிகரிக்கிறது. இந்தியா முழுவதற்கும் தேவைப்படும் கடலுணவை வட இந்தியர்களால் தர முடியாதென்பது மத்திய அரசுக்குத் தெரியாததா?
வட இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் எல்லையில் கைதாவதால் ஏற்படும் உள்ளூர் கொந்தளிப்பும் பாரதூரமானது. இன்னும் முருகைக் கற்கள் மற்றும் பவளப்பாறைகள் என்பன வட இந்தியக்கடலில் அள்ளிக்கொள்ளும் அளவு வாய்ப்பாகவும் இல்லை. எனவே, தமிழக மீனவர்களிடமிருந்தே இந்தியாவுக்குத் தேவையான மீன்களைப் பெறலாமென மத்திய அரசு கருதுகிறது. இதனால்தான், இலங்கையை எச்சரிக்கிறது இந்தியா. இந்த எச்சரிப்புக்கள் தவிர்க்க முடியாது என்பதைப் புலப்படுத்தத்தான் பல சன்மானங்களும் வழங்கப்படுகின்றன.
மன்னாரில் காற்றாலை மின்சார உற்பத்தி, இலங்கையின் வட கடலில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு என பரஸ்பரப் பரிமாறல்கள் இடம்பெறுகின்றன. ஒன்றுமட்டும் உண்மை. தென்னிலங்கையின் அரசியலுக்கு கடிவாளமிடும் அழுத்தத்தை இந்திய தொப்புள்கொடி உறவுகளால் மட்டுமே மத்திய அரசுக்கு செலுத்த முடியும். இதைச் சிந்தையில் வைத்து திராவிடர்கள் செயற்பட வேண்டும்.