திருமண படத்தை பேஸ்புக்கில் போட்டதால் கணவர் தற்கொலை! - Sri Lanka Muslim

திருமண படத்தை பேஸ்புக்கில் போட்டதால் கணவர் தற்கொலை!

Contributors

பெற்றோர் வேண்டுகோளின் படி தன் காதல் மனைவி தங்களது திருமணப் புகைப்படத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்க மறுத்து விட்டாரே என்ற கோபத்தில் திருமணமான மூன்றே மாதத்தில் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார் (29) என்ற சாப்ட்வேர் இன்ஜீனியர், சென்னை மைலாப்பூர் அப்பு தெருவில் வசித்து வந்தார்.

இவர் தன்னுடன் வேலை பார்த்த, சந்தியா என்ற கேரளாவைச் சேர்ந்த பெண் என்ஜினீயரை காதலித்தார். இவர்களின் காதலுக்கு முதலில் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் சந்தியாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்து விட, சந்தன்குமார்சிங்கின் பெற்றோர் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி, சந்தன்குமார் சிங், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்தியாவை கிறிஸ்தவ முறைப்படி, சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், இந்த திருமணத்தில், சந்தன்குமார்சிங்கின் பெற்றோர் கலந்து கொள்ளவில்லையாம். திருமணத்திற்குப் பிறகு, சந்தன்குமார்சிங், தனது காதல் மனைவி சந்தியாவுடன் மைலாப்பூர் அப்பு தெருவில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தங்களது திருமண புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் சந்தியா. இந்த படத்தைப் பார்த்த, சந்தன்குமார்சிங்கின் பெற்றோர், பேஸ்புக்கில் உள்ள படத்தை உடனே அகற்ற வேண்டும் என சந்தன்குமாரை வற்புறுத்தியதாகத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து சந்தன்குமாரும் பேஸ்புக் திருமண படத்தை அகற்றிவிடுமாறு, மனைவி சந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் சந்தியா அதற்கு மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதையொட்டி அவர்களுக்குள் மோதல் வெடித்ததுள்ளது. இந்நிலையில், நேற்று முந்தினம் காலை நீண்டநேரமாகியும், சந்தன்குமார்சிங் படுத்து இருந்த அறை கதவு திறக்கப்படவில்லையாம். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறைக்கதவை உடைத்ததில், சந்தன்குமார் அந்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

காதல் மனைவி சந்தியாவுடன் ஏற்பட்ட, பேஸ் புக் பட மோதல் பிரச்சினையில் மனம் உடைந்துபோன சந்தன்குமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக மைலாப்பூர் பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது. திருமணமான மூன்றே மாதத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team