துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் பலியான சாண்டி ஹுக் பள்ளி இடிக்கப்படுகிறது! - Sri Lanka Muslim

துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் பலியான சாண்டி ஹுக் பள்ளி இடிக்கப்படுகிறது!

Contributors

அமெரிக்காவின் கனக்டிக் மாகாணத்தில் உள்ள நியூ டவுனில் சாண்டி ஹுக் என்ற தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி  இந்த பள்ளியில் புகுந்த மர்ம ஆசாமி கண்மூடித்தனமாக 20 குழந்தைகள் உள்பட 28 பேரை சுட்டுக் கொன்றான். பலியான குழந்தைகள் 5 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள்.

 

இதற்கிடையே 28 பேரை சுட்டுக்கொன்றவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். அவனது பெயர் ஆடம் லான்சா (20) என தெரியவந்தது.   அவன் அதே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை நான்சியின் மகன். பள்ளிக்கு வருவதற்கு முன்பே அவன் தனது வீட்டில் தாயார் நான்சியை சுட்டு கொன்றுள்ளான்.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் குழந்தைகளை தவிர 8 பேர் பெரியவர்கள். அவர்களில் 3 பேர் ஆசிரியைகள். ஒருவர் பள்ளி முதல்வர். அவரது பெயர் டாவன் கோச்ஸ்பிரங். மற்ற 2 பேர் ஆசிரியைகள்.   அவர்களது பெயர் மேரி ஷெர்லாக் (56), விக்டோரியா கோடோ (23). இவர்கள் 3 பேரும் தங்களது பள்ளி குழந்தைகளை துப்பாக்கி சூட்டில் இருந்து பாதுகாக்க தங்கள் இன்னுயிரை கொடுத்தனர்.

வகுப்பறைக்குள் புகுந்து ஆடம் லான்சா துப்பாக்கியால் சுடும்போது அவர்கள் மீது குண்டு பாயாமல் தடுக்க ஆசிரியை விக்டோரியா கோடோ தனது உடலை கவசமாக்கி தடுத்துள்ளார். இதனால் உடலில் குண்டுகள் பாய்ந்து பலியானார்.

அதே நேரத்தில் கெய்ட்னின் ரோயின் என்ற ஆசிரியை பள்ளி குழந்தைகளை அருகில் இருந்த பாத்ரூமுக்குள் அடைத்து வைத்தார். சிலரை அதன் மீது ஏற்றி மறைத்து வைத்தார். இதன் மூலம் அவர் 14 குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.

அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள பல கோடி மக்களை பதற வைத்த இந்த சம்பவம் நிகழ்ந்து சில மாதங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் துப்பாக்கி உரிமம் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.

இச்சம்பவம் நிகழ்ந்த சாண்டி ஹுக் பள்ளி புதிய வர்ணப் பூச்சுடன் சுவர் ஓவியங்கள் மேஜை – நாற்காலி வரிசை மாற்றத்துடன் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. வரலாற்றின் மாறாத தழும்பாக நிற்கும் அந்த பள்ளியை முற்றிலுமாக இடித்துவிட்டு 2016-ம் ஆண்டுக்குள் புதிய பள்ளியை கட்ட கனெக்டிகட் உள்ளாட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதனையடுத்து, சாண்டி  ஹுக் பள்ளியை இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இன்னும் 4 அல்லது 5 வாரங்களில் பழைய கட்டிடம் தரைமட்டம் ஆக்கப்படும் என தெரிகிறது.

Web Design by Srilanka Muslims Web Team