தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு! - Sri Lanka Muslim

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு!

Contributors

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு 03.02.2022ஆம் திகதி, அப்பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ”தொற்றுநோயினுடாகப் பயணித்தல் – மனிதப் பண்பியல் கற்கைக்கான ஒரு புதிய பரிமானம்” எனும் தொனிப்பொருளில் இவ்வாய்வரங்கு இடம்பெற்றது. கலை கலாசார பீடத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

தொடக்க நிகழ்வின் வரவேற்புரையினை ஆய்வரங்கின் இணைப்பாளர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் நிகழ்த்தினார். தலைமை உரையினை பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் வழங்கினார். பின்னர் நிகழ்வின் பிரதம அதிதி உரையினை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் சமூக அறிவியல் மற்றும் மனிதப்பண்பியல் துறையின் முக்கியத்துவத்தினை சிலாகித்துப் பேசியதுடன் அத்துறை தொடர்பான ஆய்வுகள் மேலும் விரிபுடுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும் எடுத்துக்காட்டினார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும் கொழும்புப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியருமான பிரேமகுமார டீ சில்வா சமகால உலக நெருக்கடிகளை சமூக அறிவியல் மற்றும் மனிதப்பண்பியல் துறைகள் எவ்வாறு கையாளுகின்றன? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினர். சமூக அறிவியல் மற்றும் மனிதப் பண்பியல் துறை ஏனைய துறைகளை ஊடறுத்தும் செல்லும் விதம் குறித்தும், சமூக அறிவியல் ஆய்வுப் பரப்பினை விஷ்தரிப்பதனூடாக சமகால நெருக்கடிகளை கையாளும் வழிவகைகள் குறித்தும் அவரது உரை கவனம்செலுத்தியது.

நிகழ்வில் நன்றியுரையினை ஆய்வரங்கின் இணைச்செயலாளார் எஸ். சஜீஹரன் வழங்கினார். இந்நிகழ்வில் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், நூலகர், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவி பதிவாளர், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், போதனைசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team