தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா! - Sri Lanka Muslim

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா!

Contributors

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் முப்பெரும் திறப்பு விழா நிகழ்வு கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் தலைமையில் நேற்று (17) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூவக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் வடிவமைக்கப்பட்ட AHEAD நிகழ்ச்சித்திட்டத்தினூடாக கலை, கலாசார பீடத்தில் கட்டி முடிக்கப்பட்ட மாணவர் செயற்பாட்டு மையம் உபவேந்தரினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த AHEAD நிகழ்ச்சித்திட்டத்தினூடாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடம் 120 மில்லியன் ரூபாய் நிதியுதவியினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சகல வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டு மையத்தில் இளம்கலை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், தொழில் வழிகாட்டல் அலகு, சமூக நல்லிணக்க மையம், மாணவர் பிரத்தியேக நூலகம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.
AHEAD நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மாணவர் மையத்திற்காக சுமார் 15 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கலை, கலாசாரபீடத்தின் சகல கற்கைத்துறைகளுக்கும் தனியான நூலகத்தினை அமைப்பதற்கும் AHEAD நிகழ்ச்சித் திட்டத்தினூடாக நிதியுதவியளிக்கப்பட்டது.
இதன்படி சுமார் 2 மில்லியன் ரூபாய் செலவில் கலை, கலாசார பீடத்தின் 08 துறைகளிலும் பிரத்தியேக நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான நூல்கள், தளபாடங்கள் போன்றனவும் திட்டத்தித்தினூடாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலங்களும் இன்றைய தினம் உபவேந்தரினால் திறந்து வைக்கப்பட்டு குறித்த துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல், கணிணி அறிவு என்பவற்றினை மேம்படுத்துவதற்காக சுமார் 18.6 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

இதில் விரிவுரை மண்டபங்களை டிஜிடல் மயப்படுத்துவதற்காக 8.6 மில்லியன் செலவிடப்பட்டு, விரிவுரை மண்டபங்களில் ஸ்மார்ட்போட், எல்.ஈ.டீ. திரைகள் என்பனவும் பொருத்தப்பட்டு விரிவுரை மண்டபங்கள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
கலை, கலாசார பீடத்தின் இணைய வழிமூலமான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக தனியான தரவுத்தள சேமிப்பகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team