தென்கிழக்குப் பல்கலைக்கழக அறபு மொழி பீடத்தின் 9ஆவது சர்வதேச ஆய்வரங்கு! - Sri Lanka Muslim

தென்கிழக்குப் பல்கலைக்கழக அறபு மொழி பீடத்தின் 9ஆவது சர்வதேச ஆய்வரங்கு!

Contributors

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 9ஆவது சர்வதேச ஆய்வரங்கு பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள, முதுநிலை விரிவுரையாளர் எச்.எம்.ஏ. ஹில்மியின் ஒருங்கிணைப்பில் 28.09.2022 (புதன்) இன்று இணைய வழியிலாகவும் நேரடியாகவும் இடம்பெற்றது.

‘இஸ்லாமிய மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக சமூக-பொருளாதார அபிவிருத்தி’ எனும் தொனிப்பொருளில் இவ்வாய்வரங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாய்வரங்கின் தொடக்க நிகழ்வின் பிரதம பேச்சாளராக மலாயா பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அகடமி துணைப் பேராசிரியர் கலாநிதி அஸ்மா அப்துர் றஹ்மான் கலந்துகொண்டு உரையாற்றினார். குறித்த ஆய்வரங்கில் 49 ஆய்வுக் கட்டுரைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது விஷேட அம்சமாகும்.

இணைய வழியிலாகவும் நேரடியாகவும் இடம்பெற்ற இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 9ஆவது சர்வதேச ஆய்வரங்கில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தோர்களும், பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம்.பாஸில், கலாநிதி யூ.எள்.அப்துல் மஜீட் ஆகியோரும் நூலகர் எம்.எம்.றிபாவுடீன், திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வினை, ஆய்வரங்கின் செயலாளர் ஏ.ஆர்.எப். பேகம், உபசெயலாளர் எம்.எம். பாத்திமா பாஹிமா ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team