தென்னாபிரிக்கத் தொடர் தொடர்பாக இந்த வார இறுதிக்குள் முடிவு - Sri Lanka Muslim

தென்னாபிரிக்கத் தொடர் தொடர்பாக இந்த வார இறுதிக்குள் முடிவு

Contributors

இந்திய அணியின் தென்னாபிரிக்கச் சுற்றுலா தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து, அத்தொடர் இடம்பெறுமா என்ற சந்தேகம் காணப்படுகின்ற போதிலும், இவ்வார இறுதிக்குள் அத்தொடர் தொடர்பான முடிவு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகள், 7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 3 டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக தென்னாபிரிக்கா பயணமாகவிருந்த போதிலும், அத்தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்க மறுத்திருந்தது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சர்வதேச கிரிக்கெட் சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஹரூன் லோகார்ட் நியமிக்கப்பட்டதையடுத்தே இரு நாட்டுக் கிரிக்கெட் சபைகளுக்குமிடையில் பிணக்கு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இரு நாட்டுக் கிரிக்கெட் சபைகளும் இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தி வருகின்றன. இந்தப் பேச்சு வார்த்தைகளின் பயனாகவே இத்தொடர் தொடர்பான இறுதி முடிவு இவ்வார இறுதிக்குள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்த முரண்பாடு எழுவதற்குக் காரணமானவரான ஹரூன் லோகார்ட் நீண்ட கால விடுப்பில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையால் அனுப்பப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்குமிடையில் காணப்படும் முரண்பாடுகளைக் கருத்திற்கொண்டு இனிவரும் காலங்களிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடனான நிர்வாகத் தொடர்பாடல்களில் ஹரூன் லோகார்ட் பங்குபற்ற அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் அறிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team