தென்னாபிரிக்காவுடனான போட்டி; பாகிஸ்தான் ஒரு ஓட்டத்தால் அதிர்ச்சி தோல்வி - Sri Lanka Muslim

தென்னாபிரிக்காவுடனான போட்டி; பாகிஸ்தான் ஒரு ஓட்டத்தால் அதிர்ச்சி தோல்வி

Contributors

 

தென்னாபிரிக்க அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது.

ஷார்ஜாவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் இரண்டாவது பந்தியிலேயே விக்கெட்டை இழந்த அவ்வணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது. இறுதி நேரத்தில் வெய்ன் பார்னெலின் அதிரடி மூலம் அவ்வணி 183 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக வெய்ன் பார்னெல் 70 பந்துகளில் 56 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 51 பந்துகளில் 37 ஓட்டங்களையும், கிறேம் ஸ்மித், ஜே. பி.டுமினி இருவரும் தலா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சயீட் அஜ்மல் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஷகிட் அப்ரிடி 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சொஹைல் தன்வீர் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் இர்பான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

184 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஓர் ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

4 ஓட்டங்களுக்கே முதலாவது விக்கெட்டை இழந்த போதிலும் இரண்டாவது விக்கெட்டுக்காக 71 ஓட்டங்கள் பகிரப்பட்டன. அதன் பின்னர் 4 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களுடன் காணப்பட்ட வேளையில் அவ்வணி பலமான நிலையில் காணப்பட்டபோதிலும், இறுதி 6 விக்கெட்டுக்களையும் 17 ஓட்டங்களுக்கே இழந்து அவ்வணி தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அஹமட் ஷெஷாத் 92 பந்துகளில் 58 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் 49 பந்துகளில் 31 ஓட்டங்களையும், மொஹமட் ஹபீஸ் 39 பந்துகளில் 28 ஓட்டங்களையும், உமர் அமின் 38 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக இம்ரான் தாஹிர், வெய்ன் பார்னெல் இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும், மோர்னி மோர்க்கல், லொன்வபோ சொற்சொபி இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக வெய்ன் பார்னெல் தெரிவானார்.

Web Design by Srilanka Muslims Web Team