தென்னாபிரிக்காவை இலகுவாக வென்றது பாகிஸ்தான் - Sri Lanka Muslim

தென்னாபிரிக்காவை இலகுவாக வென்றது பாகிஸ்தான்

Contributors

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும்  பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளத.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது.

4 ஓட்டங்களுக்கே முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, பின்னர் 2 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களுடன் காணப்பட்டது. எனினும் பின்னர் விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாக இழந்திருந்தது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அஹமட் ஷெஷாத் 85 பந்துகளில் 58 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ், ஷகிட் அப்ரிடி இருவரும் தலா 26 ஓட்டங்களையும் மிஸ்பா உல் ஹக் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக றயன் மக்லரன் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் மோர்னி மோர்க்கல் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் இம்ரான் தாஹிர், வெய்ன் பார்னெல் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

210 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 40.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 7 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, அதன் பின்னர் 2வது விக்கெட்டுக்காக 36 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும்  அதன் பின்னர் விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாக இழந்து தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக றயன் மக்லரன் 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் ஜே.பி.டுமினி 45 பந்துகளில் 25 ஓட்டங்களையும் வெய்ன் பார்னெல் 22 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷகிட் அப்ரிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் இர்பான் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் சயீட் அஜ்மல் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் சொஹைல் தன்வீர் மற்றும் மொஹமட் ஹபீஸ் இருவரும்  தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஷகிட் அப்ரிடி தெரிவானார். இரண்டு போட்டிகளின் நிறைவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team