தேசியங்களின் தடுமாற்றத்தில் தளம்பும் தீர்வுகள்! -சுஐப் எம்.காசிம்- Sri Lanka Muslim

தேசியங்களின் தடுமாற்றத்தில் தளம்பும் தீர்வுகள்! -சுஐப் எம்.காசிம்-

Contributors

ஆயுதப்போரின் மௌனத்தின் பின்னர் சிறுபான்மையினரின் உரிமைப் போர் அடங்கிப்போனதாக நினைத்திருந்த சிலருக்கு, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் சந்திப்புக்களும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு நகல் வரையும் முயற்சிகளும் ஆச்சர்யம்தான். இந்தப் போர் ஓய்ந்த மறுகணமே, சில தமிழ் தலைமைகள் விட்டிருந்த அறிக்கைகள், உரிமை உணர்வுகள் அடங்கவில்லை என்பதைத்தான் காட்டியிருந்தன. ஆயுதங்கள் வீழ்ந்தாலும் அகிம்சைகள் இயங்கிக் கொண்டேயிருக்கும். இதையே இவர்களது அறிக்கைகள் அன்று (2009) கட்டியங்கூறின.
தவிர்க்க முடியாமல் தூக்கப்பட்ட ஆயுதங்கள், தவறிழைப்பதையும் தவிர்க்க முடியாதிருந்த வடுக்களிலிருந்து மீள்வதற்கு, தமிழ்மொழிச் சமூகங்கள் இன்னும் தயாரில்லை. இதைத்தான் இவர்களது சந்திப்புக்களின் இழுபறிகள் காட்டி நிற்கின்றன. இந்த வடுக்களைப் போக்குவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை களையாத எந்தப் பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்காது. பேச்சளவில் இவ்வாறான சந்திப்புக்கள் நல்லதாக இருக்குமே தவிர, நடைமுறையில் குடைசாயவே செய்யும்.
இற்றைக்கு மூன்று தசாப்தங்களை கடந்துள்ள இந்த இந்திய – இலங்கை ஒப்பந்தம், சிறுபான்மை சமூகங்களின் உரிமையில் எதைச் சாதித்திருக்கிறது? அன்றைய (1987) அதே மனநிலையில்தான் வட – கிழக்கு சிறுபான்மை இனம் உள்ளதா? என்பவை ஆராயப்பட வேண்டிய விடயங்கள். குறிப்பாக, முஸ்லிம் தலைமைகளுக்கு இந்த ஆராய்ச்சி அவசியப்பட்டேயாகும். ஏனெனில், இணைப்பு குறித்த அச்சம் முஸ்லிம்களிடம்தானே இருக்கிறது. ஆயுதப்போராட்ட காலத்திலிருந்த அச்சம் இப்போதைக்கு முஸ்லிம்களுக்கு அவசியமில்லை, மிதவாத தமிழ் தலைமைகளை நம்பலாமென முஸ்லிம்களை சாந்தப்படுத்துவது சந்தோஷம்தான். ஆனால், இதிலுள்ள சந்தேகங்களை போக்கும்படி, சாந்தப்படுத்தும் இந்த தமிழ் தலைமைகள் நடந்திருக்கிறதா? இதுதான் இன்றைய கேள்விகள்.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் பெருக்கெடுக்கும் தமிழ் தேசியவாதத்துக்குள் முஸ்லிம்களுக்கென்ன தீர்வு? எழுத்தில் இது உத்தரவாதப்படுத்தப்படவில்லை என்கிறது ஒரு முஸ்லிம் தலைமை. தமிழரசுக்கட்சியின் முன்னைய கால தீர்மானங்களிலே, இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கும் ஒரு சுயாட்சிக்கு உத்தரவாதமிருக்கையில், இந்தச் சந்திப்புக்களில் இவ்விடயம் தௌிவாக்கப்படாதது ஏன்? இவ்விடயத்தை மறுபக்கத்திலும் பார்க்க முடிகிறது. இந்த மாகாணங்களை இணைப்பது பற்றி எப்போதோ பேசப்பட்டிருக்கையில், இப்போது எதற்கு முஸ்லிம்களுக்கு அச்சம்? ஆயுதங்கள் ஒழிந்த நிலையில், அடக்குமுறையை ஏன் சிந்திப்பது? போராடிய பிரதான சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கே விடிவின்றியிருக்கையில், தாய்வீட்டுத் தகராறுக்கு முஸ்லிம்கள் ஏன் அவசரப்பட வேண்டும்? இந்த இரட்டைப்பின்னல்களையே முதலில் இந்த இருதரப்பு தலைமைகளும் அவிழ்க்க வேண்டும்.
துரதிஷ்டமாக, தங்களது சமூகத்தின் உரிமை விடயத்தில் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதில் முஸ்லிம் தலைமைகள் பலவீனமடைந்திருக்கிறதுதான். அதற்காக, தமிழ் தரப்பு பலமடைந்தது என்பதல்ல பொருள். ஒப்பீட்டளவில் முஸ்லிம்களிடம்தான் இந்தக்கட்மைப்பு இல்லாதிருக்கிறது. எத்தனை கட்சிகள் இருந்தாலும் வடக்கு, கிழக்கு இணைப்பில் சகல தமிழ் கட்சிகளும் ஒருமித்திருப்பதைத்தான் பலம் என்கிறோம். “கிழக்கை பிரித்தேயாக வேண்டும்” என எல்லா முஸ்லிம் தலைமைகளும் சொல்லாதிருப்பதுதான் இவர்களது பலவீனம். மாறாக, பிரிக்காமலும் முஸ்லிம்கள் பலப்பட முடியும் என்றா இந்த முஸ்லிம் தலைமை நினைக்கிறது? அப்படியானால், இதை தௌிவூட்டாமல் ‘மதில்மேல் பூனைபோல்’ இருப்பது ஏன்?
உண்மையில், தமிழ்மொழியின் பலமும், சிறுபான்மையினரின் நிலமும் வடக்கு, கிழக்கு இணைப்பில்தான் பாதுகாக்கப்படும். கடந்து வந்த காலங்கள் உணர்த்திய கற்றல்கள் இவை. முஸ்லிம்களிடத்திலும் இதற்கு மாற்றுக்கருத்துக்கள் குறைவாகத்தானிருக்கிறது. நிபந்தனையற்ற இணைப்போ, “நிபந்தனையற்ற பிரிப்போ யதார்த்தத்தை உணர்ந்த நிலைப்பாடில்லை” என தனித்துவ கட்சியின் ஸ்தாபகத் தலைவர் இதைப்பற்றி அடிக்கடி கூறியதைத்தான், இன்றைய முஸ்லிம் கட்சிகள் கருத்தில்கொள்ள வேண்டும். வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு முஸ்லிம்கள் அங்கீகாரம் வழங்கினால், முதலாவது முதலமைச்சர் முஸ்லிம்களுக்கு தரப்படும் என்ற உத்தரவாதம் தமிழர் தரப்பில் இருப்பதும் தாய் நிலத்தை துண்டாடுவதிலுள்ள தயக்கம்தான்.
எனவே, இவ்வளவு இறுக்க நிலைப்பாட்டுடன் உள்ள இந்த தமிழ் தலைமைகள், முஸ்லிம் சிவில் சமூகத்துக்குள் நுழைந்து பணியாற்றுவது பற்றிச் சிந்திப்பதுதான் சிறந்தது. வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி, தென்னிலங்கையிலும் அரசியல் செய்யும் கட்சிகளுக்கு இவ்விடயத்தில் முடிவெடுப்பது மூச்சை விடுவதுபோன்ற நிலைதான். இதனால்தான், தென்னிலங்கை தமிழ்பேசும் கூட்டணியும் இந்தப் பேச்சுக்களிலிருந்து முகத்தை திருப்பிக்கொண்டதோ தெரியாது! இந்த திசைமாறல்களும், தடுமாறல்களும் இல்லாதிருக்க வேண்டுமானால், இந்தியாவை நாடுவதற்கு முன்னர் யதார்த்தங்களை தேட வேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team