‘தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் தோற்கும்’ - சஷீந்திரராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு..! - Sri Lanka Muslim

‘தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் தோற்கும்’ – சஷீந்திரராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு..!

Contributors
author image

Editorial Team

விமர்சனங்களுக்கு உள்ளாகுவது ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு சாதாரணமாகிவிட்டது என தெரிவித்த விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ , விமர்சனங்களுக்கு மத்தியில் எமது கிராமங்களுக்கு நிச்சயம் நாம் செல்வோம் என்றார். பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், விவசாயத்துடன் தொடர்பில்லாதவர்களும், சேதன பசளை தொடர்பில் தெளிவில்லாதவர்களும் தான் பெரும்பாலான போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.

சிறந்த திட்டங்களை செயற்படுத்தும் போது சவால்களும்,முதற்கட்ட தோல்விகளும் ஏற்படுவது சாதாரணமானது. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த திட்டத்தை செயற்படுத்தவில்லை.நாளை தேர்தல் ​நடைபெற்றால் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையும். விஷத்தை உண்டு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை. எனக்கு தேர்தல்வெற்றிதான் முக்கியமென ஜனாதிபதி கருதவில்லை.

மக்களின் நலனை உடல் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கும் அரச தலைவர்கள் குறைவாக உள்ளனர். சேதன பசளையை கொண்டு பெரும்பாலான விவசாயிகள் நெற்செய்கையிலும் ,மரக்கறி விவசாயத்திலும் ஈடுப்படுகிறார்கள். சேதன பசளை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார்கள்.

சேதன பசளை திட்டம் தற்போது அரசியலாக்கப்பட்டுவிட்டது.சேதன பசளை திட்டம் தொடர்பில் ஒரு சில குறைப்பாடுகள்காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இதனை தேசிய பிரச்சினையாக கருத்திற்கொண்டுஅனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team