நல்லிணக்கம், மத ஒருமைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதியால், கோட்டாவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையை தூக்கி எறிய முடியுமா? - ஹக்கீம் கேள்வி! - Sri Lanka Muslim

நல்லிணக்கம், மத ஒருமைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதியால், கோட்டாவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையை தூக்கி எறிய முடியுமா? – ஹக்கீம் கேள்வி!

Contributors

அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லிணக்கம், மத ஒருமைப்பாடு உள்ளிட்ட பல சிறந்த விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் தெரிவித்த விடயங்களை நடைமுறை சாத்தியமாக்குவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ‘சர்வகட்சி ஒன்றிணைவு’ என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளின் தலைவர் இணைந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 3 மாதங்களாக ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்களினால் பாரிய மக்கள் புரட்சிகள் ஏற்பட்டன. அதன் பின்னரே இந்த ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார். அவரால் நாடாளுமன்றத்தில் ஆற்றப்பட்ட கொள்கை பிரகடன உரையில் விமர்சனத்திற்குரிய விடயங்கள் எவையும் காணப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பிரித்தானியாவின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. மாறாக இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு போலியாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அப்போது கடமையிலிருந்த அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோருகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி மீதுள்ள குற்றச்சாட்டுக்களை அவரால் நீக்கிக் கொள்ள முடியுமா? தனது கொள்கை பிரகடன உரையில் நல்லிணக்கம் , மத ஒருமைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதியால் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையை தூக்கி எறிய முடியுமா? அவ்வாறு செய்தால் அவர் மீது நம்பிக்கை கொண்டு , அவரது வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்றார்.

 

எம்.மனோசித்ரா

Web Design by Srilanka Muslims Web Team