நவீன அரசியல் கலாசாரத்துக்கு நவீன மதச் சிந்தனைகள் அவசியமா? -சுஐப் எம்.காசி்ம்- Sri Lanka Muslim

நவீன அரசியல் கலாசாரத்துக்கு நவீன மதச் சிந்தனைகள் அவசியமா? -சுஐப் எம்.காசி்ம்-

Contributors

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு மதங்களின் இருப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியிருந்தது. மதங்கள் தோன்றிய தொன்மைக்காலங்களில் இருந்த உலகம் இன்று இல்லை. இதனால், நவீன போக்குகளால் ஏற்பட்டுள்ள நடைமுறைப் பிரச்சினைகளுக்கு சமயங்கள் தீர்வின்றி தவிப்பதை மறைமுகமாகச் சொன்ன ஜனாதிபதி, இவை

நவீன சிந்தனையின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்கிறார். மக்களின் நம்பிக்கைகளைத் திருப்திப்படுத்தும் தீர்வுகளை முன்வைக்கும் மதங்களால்தான், எதிர்காலத்தில் நிலைக்க முடியும் என்பதும் ஜனாதிபதியின் மறைமுகக் கருத்தாகும். நாட்டின் தலைவர் என்ற வகையிலும் தீவிர தேடலுடையவர் என்ற அடிப்படையிலும் அவரது உரையிருந்தது.

மதங்களின் தோற்றுவாய்ப் பிரதேசங்களிருந்து பிறப்பவையே கலாசாரம். இது, மதங்களின் தத்துவத்தைப் பறைசாற்றுவதில் பிரதான பங்கு வகித்தாலும், மதங்களின் அடிப்படையைப் பாதுகாப்பது நம்பிக்கை மாத்திரமே! இந்த நம்பிக்கைகளால் எந்தப் பிரச்சினைகளும் ஏற்படப்போவதில்லை என்பதற்கு பிரித்தானிய பிரதமர் இந்துவாக இருப்பதையும், லண்டன் மாநகர மேயராக முஸ்லி்ம் இருப்பதையும் உதாரணம் காட்டியிருந்தார் ஜனாதிபதி. இவ்விருவரும் தங்களது கலாசார அடையாளங்களைத் தூக்கிப்பிடித்திருந்தால் இப்பதவிகளுக்கு வந்திருக்க முடியாது என்பதுதான் ஜனாதிபதியின் நவீன கருத்தியல். இதுபோன்று ஸ்பெயினிலுள்ள ஐபீரியன் தீவுகளில் இஸ்லாமியரின் ஆட்சி நிலவினாலும், இஸ்லாத்தின் கலாசாரம் அங்கு கோலோச்சவில்லை எனக் கோடிட்டும் காட்டினார் அவர்.

எனவே, அடிப்படையைப் பின்பற்றுவதில் எந்த முரண்பாடுகளும் ஏற்படப்போவதில்லை. கலாசார அடையாளங்களைத் தூக்கிப்பிடிப்பதுதான் அடிப்படைவாதத்தை தோற்றுவிக்கிறது என்ற முடிவுக்கு நவீன உலகம் குறிப்பாக இந்து, பசுபி்க் மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்கள் வரவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு.

நாகரீகங்களை நோக்கி மதங்களை நகர்த்த வேண்டும் என்பது அடிப்படை அகீதாவில் முரண்பட்டல்ல. இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களிலிருந்து (புனித குர்ஆன், ஹதீஸ்) கிடைக்கும் ஆதாரங்களும் அதற்கு மேலாக (“இஜ்மாஉ, கியாஸ்”) இமாம்களின் ஏகோபித்த முடிவில் பெறப்படும் முடிவுகளிலும்தான். இத்தகைய மிகப்பெரிய இமாம்கள், உலமாக்களை உள்ளடக்கிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை முஸ்லிம்களின் மரியாதைக்குரிய ஒரு அமைப்பாகவே கருதப்படுகிறது. இந்த அமைப்பு நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருப்பதற்கு பல அடிப்படைக் காரணங்கள் இருந்திருக்கின்றன.

முதலாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் உலகில் நிலவிய சூழல், இஸ்லாத்தின் நேரிய சிந்தனைகள், பாதைகளுக்கு குறுக்காகவும், களங்கமாகவும் இருந்ததால் இவற்றில் முஸ்லிம்கள் சிக்குண்டு, நெறி பிறழ்வதைத் தடுத்து, நேர்வழிகாட்டவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது மூத்த உலமாக்கள் இதில் கவனமாக இருந்திருப்பது மாத்திரமே போதும், சகல முஸ்லிம்களும் இந்த அமைப்பை ஏகமனதாக ஆதரிக்க. நேரிய கலீபாக்களின் (இஸ்லாமிய ஆட்சியாளர்கள்) அரசாங்கத்தையே புரட்டுமளவுக்கு வியூகங்களும், சதிகளும் தீட்டப்பட்ட காலத்தில் இப்படியொரு அமைப்பை உருவாக்கச் சிந்திப்பது சாமான்ய விடயமுமல்ல.

எனவே, இந்தப் பயணத்தின் வரலாற்றுத் தடயங்களை தேடியறிவது இலங்கை முஸ்லிம்களுக்கு பொறுப்பாக்கப்படுகிறது. இந்த அறிதல்கள்தான் இப்போது முஸ்லிம்களுக்குள் ஏற்பட்டுள்ள சில்லறைப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
மேலும், இந்தச் சில்லறைப் பிரச்சினைகள் பெரிதாகி, விஸ்வரூபமாகி முஸ்லிம் சமூகத்தை அழிக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வரலாற்றுப் பொறுப்பாகிறது. இதை, இவ்வமைப்பினர் உணர்வது அவசியம்.

எட்டாயிரத்துக்கும் அதிகமான உலமாக்களைக் கொண்டுள்ள ஜம்இய்யதுல் உலமா சபையை மாற்று மத சகோதரர்கள் நோக்கும் கோணங்களில்தான், அரசாங்கமும் நோக்கப்போகிறது. பன்முக பரிமாணங்களில் வளர்ந்துள்ள பல மதங்கள் உள்ள நாடு இது. எனவே, முஸ்லி்ம்கள் மாத்திரம் நவீனத்தை புறந்தள்ளி சமூக இணக்கப்பாடுகளைக் கொண்டுவர முடியாது. மதங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வைக் கொண்டு வருவதற்கான பிரதான பாதை, நவீனத்தை இணங்கிக்கொள்வதிலேயே இருக்கிறது. இந்த இணக்கப்பாடுகள் இல்லாமலானதால்தான், மதங்களுக்கிடையில் அல்லது மதங்களின் பேரில் மோதல்கள் உண்டாகின. நம்பிக்கைகளுக்காக மதங்கள் மோதியது கிடையாது. கலாசார அடையாளங்களைக் காப்பாற்ற அல்லது தூக்கிப் பிடிக்கப் புறப்பட்டதில்தான் மோதல்கள் எழுந்திருக்கின்றன.

எனவே,நாட்டில் ஏற்படப்போகும் நவீன அரசியல் கலாசாரத்துக்கு ஏற்ப மக்களைப் பழக்கும் பணிகளை, அதில் நம்பிக்கையூட்டும் வேலைப்பாடுகளை மத அமைப்புக்கள் செய்ய முன்வர வேண்டும். நூற்றாண்டின் காலடியில் பயணத்தை ஆரம்பிக்கும் ஜம்இய்யதுல் உலமா சபைக்கு ஜனாதிபதி சொல்லியதும் இதைத்தான். முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டம், சமூக இணக்கப்பாடுகளுக்குத் தடையாகவுள்ள சமயப் பழமைகளை கைவிடும் மனநிலை அல்லது அதன் அடிப்படையைப் புரியும் அறிவு, அடையாள அரசியலுக்கு முன்னுரிமையளித்தல் மற்றும் வேறுபாடுகளிலுள்ள பிடிவாதங்களை இல்லாமல் செய்ய வேண்டிய நவீனத்துக்கு சகலரும் வரவேண்டியுள்ளது. முஸ்லி்ம் சமூகத்தில் இந்தப் பணிகளுக்கு முன்னோடியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும்,தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் முன்வர வேண்டும். இந்தப் பணிகளில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் அவசியம் பங்கெடுப்பதே முஸ்லிம்களின் பின்னடைவுகளை முன்னேற்ற உதவும்.

Web Design by Srilanka Muslims Web Team