'நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கும் சக்தி ரணிலிடமே உள்ளது' - அசாத் சாலி! - Sri Lanka Muslim

‘நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கும் சக்தி ரணிலிடமே உள்ளது’ – அசாத் சாலி!

Contributors

பொருளாதார நெருக்கடியில் இருந்தும், அரசியல் நெருக்கடியில் இருந்தும் நாட்டை மீட்டெடுக்கும் சக்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டுமே உள்ளதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். இந்த நாட்டின் சிறந்த அரசியல் ஞானம் நிறைந்தவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

தினகரன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் போதே, அசாத் சாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கோ வேறெந்தக் கட்சிகளுக்கோ நாட்டை மீட்டெடுக்கும் சக்தி கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

அசாத் சாலி மேலும் கூறியதாவது:

பாராளுமன்றத்தில் இருக்கும் பிரதமர், சபாநாயகர் தவிர்ந்த ஏனைய 223 பேரில் ரணில் விக்கிரமசிங்கவிடம் மாத்திரமே தேசத்தை நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கக் கூடிய அரசியல் ஞானம் காணப்படுகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே இதனை நான் தெரிவித்திருந்தேன். எமது நாட்டில் அரசியல் வரலாற்றில் பொய் சொல்லாத ஒரே அரசியல் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மட்டுமே குறிப்பிடலாம். நல்ல திறமை மிக்க அரசியல் ஞானியாகவே அவரை எம்மால் பார்க்க முடிகிறது. இந்த யதார்த்தத்தை எவராலும் மறுத்துரைக்க முடியாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட போது, பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் பயந்து நெருக்கடி மிக்க சூழ்நிலையில் தன்னால் முடியாது என மறுப்புத் தெரிவித்தார். அதன் பின்னரே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் தைரியமாக முன்வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார் அந்த நேரத்தில் பதவி விலகிய மஹிந்த ராஜபக்ஷ கூட ரணில் விக்கிரமசிங்க குறித்து நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில்தான் முதலில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.

பாராளுமன்றத்தில் 134 எம்.பிக்களின் ஆதரவோடு, அரசியல் யாப்புக்கு அமையவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று அவரை எதிர்த்தவர்கள் கூட இன்று பாராட்டுகின்றனர், வரவேற்கின்றனர். ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே நாட்டை பேரழிவிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று அவர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களும் கூட நம்புகின்றனர். பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைய முன்னரே எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை, அத்தியாவசியப் பொருட்களின் வரிசை உட்பட முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சக்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்பட்டது.

பொருட்களின் விலை அதிகரிப்பு எமது நாட்டுக்கு மட்டுமல்ல, உலகின் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் காணப்படுகின்றது.

அது எமது நாட்டுக்கு மட்டும் விதிவிலக்கல்ல என்பதை படிப்பறிவு உள்ள அனைவரும் அறிவர். விலை அதிகரிப்பைக் காட்டி மக்கள் மத்தியில் பொய்யான அரசியல் செய்ய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முனைகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் அரசியல் ஆளுமை கிடையாது. அவர் உண்மைக்கு மாறானவற்றைக் கூறி நாட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். போகும் இடமெல்லாம் தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறும் சஜித், நாட்டின் பொருளாதார நெருக்கடியை உணர மறுக்கிறார்.

சில அரபு நாடுகள் தமக்கு எரிபொருள் வழங்க உறுதி அளித்ததாக அவர் கூறியிருக்கின்றார். ஆனால் அந்த நாடுகளின் தூதுவர்களிடம் கேட்டபோது “அப்படி நாம் ஒருபோதும் உறுதி அளிக்கவில்லை” எனவும் “தனிநபர்களுக்கு அப்படி வழங்கப் போவதில்லை” எனவும் கூறினர். “அப்படி வழங்குவதாக இருந்தால் நாட்டின் அரசாங்கத்துக்கே அது வழங்கப்படும்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சில தரப்பினரின் ஆதரவு கேள்விக்குறியாக இருப்பதால் ஜனாதிபதி தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றார். அதில் இணைவதற்கு சஜித் தரப்பிலிருந்து முக்கியமான பலர் முன்வந்துள்ளனர்.

அடுத்து வரும் நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர் தனியாகி விடுவார். அவரோடு உள்ள பலர் வெளியேறத் தயாராகி வருகின்றனர்.

நாட்டைப் பற்றிச் சிந்திக்காமல், சுயநல அரசியல் செய்ய முற்படும் தேசப்பற்று இல்லாதவர்களோடு மக்கள் இணையத் தயாராக இல்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். கட்சி அரசியலை மறந்து அனைத்து சக்திகளும் ஒன்றுகூட முன்வர வேண்டும். அதன் மூலமே பேரழிவிலிருந்து எமது தேசத்தை மீட்டெடுக்க முடியும்.

Web Design by Srilanka Muslims Web Team