நாமல் ராஜபக்ஷ மீதான 70 மில்லியன் ரூபா முறைக்கேடு வழக்கு; சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற தீர்மானம்! - Sri Lanka Muslim

நாமல் ராஜபக்ஷ மீதான 70 மில்லியன் ரூபா முறைக்கேடு வழக்கு; சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற தீர்மானம்!

Contributors

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பான வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரே இன்று இதனை நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த வழக்கை செப்டம்பர் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட், இலங்கையின் ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்காக 70 மில்லியன் ரூபாவை, சிலோன் பிரீமியம் ஸ்போர்ட்ஸ் தலைவர் நிஹால் ஹேமசிறி பெரேராவிடம் வழங்கியிருந்தது..

எனினும் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, நிஹால் ஹேமசிறி பெரேராவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிற்கு கிரிஷ் நிறுவனம் பணத்தை அனுப்பியதாகவும், பின்னர் அவர், நாமல் ராஜபக்சவிடம் இரண்டு தடவை பணத்தை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கிரிஷ் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பணத்தை சந்தேகநபர், நிறுவனத்தின் உண்மையான நோக்கத்திற்கு பயன்படுத்தாமல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி, இந்த வழக்கை, ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தாக்கல் செய்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team