நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை பொறுப்பேற்பதற்கு சஜித் தயார் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! - Sri Lanka Muslim

நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை பொறுப்பேற்பதற்கு சஜித் தயார் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

Contributors

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை பொறுப்பேற்பதற்கு தயார் என அறிவித்துள்ளார்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமைப்பில் உள்ள சிறுபான்மை கட்சிகளும், அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பிரிந்து சென்ற ஹரீன் பெர்ணான்டோ உள்ளிட்ட ஏனையோரும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்து, கைக்கொடுக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், மகாநாயக்கர்கள் உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய, கீழ்வரும் நிபந்தனைகளுக்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி முதன்மையாகக் கொண்ட அனைத்துக்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் கீழ், இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும், ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவியை ஏற்கவும் தான் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

நிச்சயிக்கப்பட்ட குறைந்தபட்ச காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்தல். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இரு வாரங்களுக்குள் அமுலாக்குதல்.

தாம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு, அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, குறுகிய காலத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுத்தல்.

மக்களின் வாழ்க்கையை சீரமைக்க சட்ட ஒழுங்கை நிலைநாட்டி, மேற்படி அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்தியதன் பின்னர், நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்காக மக்களுக்கு வாய்ப்பளிக்க நாடாளுமன்ற தேர்தலொன்றை நடத்தல் வேண்டும்.

மேற்கூறிய மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவன் ஊடாக, பொருளாதார சீரழிவுக்கு உட்படுவதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தாம் விரும்புவதாகவும், புதிய அரசாங்கத்துக்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையைாட தான் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாஸ அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team