
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் கத்தாருடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – 4 அரபுநாடுகள் கூட்டாக அறிவிப்பு
நிபந்தனைகளை கத்தார் ஏற்கும் பட்சத்தில் தூதரக உறவை புதுப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என 4 அரபுநாடுகள் அறிவித்தன.
அரபுநாடுகளில் ஒன்றான கத்தார் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்து வருவதாக கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய 4 நாடுகள் அந்நாட்டுடனான தூதரக உறவை கடந்த ஜூன் மாதம் 5–ந் தேதி துண்டித்துக்கொண்டன.
கத்தார் விவகாரத்தில் சுமுகமான தீர்வுகாண குவைத் நாடு மத்தியஸ்தம் செய்யும் பணியில் இறங்கியது. இதன் பயனாக அந்த 4 நாடுகளும் ஒன்றுகூடி கலந்தாலோசித்து 13 நிபந்தனைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டது.
கத்தார் இந்த நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில் தூதரக உறவை புதுப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என அந்த நாடுகள் அறிவித்தன. ஆனாலும் கத்தார் நிபந்தனைகளை ஏற்பது குறித்து இன்றுவரை முறையான பதில் அளிக்கவில்லை.
இந்த நிலையில் 4 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் நேற்று முன்தினம் பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘கத்தார் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதை கட்டயாமாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மேலும் அந்நாடு எடுக்கக்கூடிய முடிவு மற்ற நாடுகளின் வெளியுறவுத்துறை விவகாரங்களில் தலையிடுவதாக இருக்கக்கூடாது. அதோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 13 நிபந்தனைகளுக்கு பதில் அளிக்க வேண்டும். மேற்கூறியவற்றை கத்தார் ஏற்கும் பட்சத்தில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 நாடுகளும் தயாராக உள்ளன’’ என தெரிவித்தனர்.
மேலும், கத்தார் மீது புதிய பொருளாதார தடைகள் ஏதும் விதிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.