நேர்முக வர்ணனையாளர்களை கிரிக்கெட் சபை கட்டுப்படுத்துவதில்லை: என். ஸ்ரீனிவாசன் - Sri Lanka Muslim

நேர்முக வர்ணனையாளர்களை கிரிக்கெட் சபை கட்டுப்படுத்துவதில்லை: என். ஸ்ரீனிவாசன்

Contributors

இந்திய அணி பங்குபற்றும் போட்டிகளில் நேர்முக வர்ணனையாளர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கட்டுப்படுத்துவதில்லை என அச்சபையின் தலைவர் என்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெறும் போட்டிகளில் ஒளிபரப்பின் தயாரிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையே கொண்டிருக்கும் நிலையில், அப்போட்டிகளில் நேர்முக வர்ணனையாளர்களாகப் பணிபுரிபவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக, இந்திய அணியின் தேர்வு, தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிர்வாகம் உட்பட சில விடயங்கள் பற்றி நேர்முக வர்ணனையில் கருத்துக்கள் தெரிவிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அவ்வாறான கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விதிப்பதில்லை எனத் தெரிவித்த என். ஸ்ரீனிவாசன், அவர்கள் எதைப் பற்றிக் கதைக்க வேண்டும், எதைப் பற்றிக் கதைக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்ததில்லை எனக் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் போட்டிகளின் தயாரிப்பு இதுவரை காலமும் தொழில்முறையில் சரியான வகையில் இருந்ததில்லை எனக் குறிப்பிட்ட என். ஸ்ரீPனிவாசன், அதனை ஒழுங்குபடுத்துவதற்காகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தொலைக்காட்சித் தயாரிப்பில் களமிறங்கியதாகக் குறிப்பிட்டார்.

இம்முறை இடம்பெறும் இந்திய, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் நேர்முக வர்ணனையாளராகக் கடமையாற்றவிருந்த அவுஸ்ரேலியாவின் இயன் சப்பல் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு மறுப்புத் தெரிவித்து நேர்முக வர்ணனையிலிருந்து விலகிக் கொண்ட போதிலும், அது குறித்துக் கருத்துத் தெரிவிக்க என். ஸ்ரீனிவாசன் மறுத்துவிட்டார்.

அதுகுறித்து தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்திடமேயே கேட்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team