நேற்றிரவு மு.கா வின் உயர்பீடத்தில் நடந்தது என்ன? பரபரப்பான தகவல்கள் - Sri Lanka Muslim

நேற்றிரவு மு.கா வின் உயர்பீடத்தில் நடந்தது என்ன? பரபரப்பான தகவல்கள்

Contributors
author image

ஊடுருவி

மு.காவின் அதி உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு தாறுஸ்ஸலாமில் இடம்பெற்றது.
மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

 

அதே போன்று, கிழக்கு மாகாண சபையின் 07 முகா உறுப்பினர்கள் அடங்கலாக உயர்பீடத்தின் பெரும்பாலானோர் நேற்றைய கூட்டத்திற்கு சமுகமளித்திருந்தனர்.

 

கூட்டத்தை ஆரம்பித்து வைத்து ரவூப் ஹக்கீம் உiராயற்றிய போது ,பாதுகாப்புச் செயலாளருடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை பற்றியும் அதனால் முஸ்லிம்கள் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் கருத்து தெரிவித்து, அரசுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தொடர்ந்து பேசி பேச்சை நிறைவு செய்தார்.

 

இதன்போது குறுக்கிட்ட மு.கா வின் ஸ்தாபக பொதுச் செயலாளர் சட்டத்தரணி கபூர் ,ஹக்கீமின் உரையை முற்றாக மறுதலித்து கருத்து வெளிப்படுத்தினார்.

 

“கட்சி தீர்மானித்து மக்கள் முடிவெடுத்த காலம் மாறிப்போய் இன்று மக்கள் முடிவெடுத்து அதனை கட்சி ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.மக்களின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவே மு.கா முயற்சிக்க வேண்டும். அடுத்து வரப்போவது பொதுத் தேர்தல். எனவே மக்கள் அத்தேர்தலில் எமக்கு வாக்களிக்க வேண்டுமெனின் இன்று மக்கள் மத்தியில் உள்ள மனோநிலைக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும் என்றார் கபூர்”

 

கோட்டா எமக்கு தருவதாக வாக்குறுதியளித்தவை , அது எப்போதோ தந்திருக்க வேண்டியவை. இப்போதுதான் அவர்களுக்கு ஞானம் பிறந்துள்ளது. ஆனாலும் அவர்கள் தரவேண்டியதை நாம் பெற்றுக் கொள்வோம். அதற்காக மக்கள் மனோநிலைக்கு மாற்றமாக செயற்பட முடியாது என்றும் கபூர் விபரித்தார்.!

 

இதன் பின் உரையாற்றிய கல்முனை மாநகர சபை பிரதி மேயர் முழக்கம் மஜீத் வழமைக்கு மாறாக மகிந்த அரசுக்கு சாரப்பட பேசினார்.

 

மகிந்த மீண்டும் வந்தால் முஸ்லிம்களை பழிவாங்குவார் என்ற மக்கள் மத்தியில் இருக்கும் அச்ச சூழ்நிலையை நாம் அவதானிக்க வேண்டும். மகிந்த அரசு இன்று சட்டத்தை கையில் எடுத்துள்ளது என்றெல்லாம் பேசி மகிந்த அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் யோசிக்க வேண்டும் என்றார்.

 

இவ்வாறு இருவேறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை குறுக்கிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், ஒரு போதும் மகிந்த அரசை விட்டு நாங்கள் வெளியேறப் போவதில்லை என்றனர்.

 

நாங்கள் மகிந்தவுக்கு எதிராக தேர்தலில் செயற்படுவதற்கான காரணத்தை இங்கு குறிப்பிட்டு காட்ட வேண்டும் என்று 07 பேரும் ஒருமித்த குரலில் கடுமையாக கருத்தும் வெளிப்படுத்தினர்.

 

அரசிலிருந்து வெளியேறுவதற்கான பொருத்தமான காரணத்தை சொன்னால்தான் நாம் வெளியேறுவோம். சமுக வலைத்தளங்களில் சின்னத் தனமாக தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு பயந்து வெளியேற முடியாது என்றார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்.

 

இதைக் கேட்டு கடும் கோபமுற்ற ஜவாத்-  ” உமக்கு என்ன விளக்கம் சொல்ல வேண்டியிருக்கின்றது. தலைவர் அஸ்ரபை சுட முயற்சித்தவன் நீ. அஸ்ரப் மரணித்த போது அக்கரைப்பற்றில் வெடிச் சுட்டவன் நீ. இன்றைக்கு கட்சிக்கு வந்த உமக்கு விளக்கம் கூற வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.  நான் கட்சிக்காகச் செய்த தியாகத்தில் ஒரு கடுகளவேனும் நீ செய்திருக்கமாட்டாய். உயிர் ,பொருளாதாரம் என அனைத்தையும் இழந்தவன் நான்’ என்று கடுமையாக உரத்த குரலில் தவத்தை நோக்கி கைநீட்டியவராக பேசினார்”.

 

 
அப்போது குறுக்கிட்ட கபூர் – “‘நீ என்ன பெரிய கதை கதைக்கிறாய். கட்சி உனக்கு விளக்கம் சொல்ல நீ யார்? அரசை விட்டு வெளியேற வேண்டும் என்று உயர்பீடம் முடிவெடுத்தால் அதைத் தான் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கடுமையாக பேசினார்”

 

இதன் பின் உரையாற்றிய ஹரீஸ் எம்பி ,முஸ்லிம்களின் மனோநிலைக்கு ஏற்பவே நாம் முடிவெடுக்க வேண்டும். மக்கள் இன்று முகாவை விட்டு தூரமாகிக் கொண்டிருக்கின்றனர். முகாவின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் கட்சி செல்வாக்கு இழந்து வருகின்றது. எனவே நாம் அரசிலிருந்து வெளியறுவதே பொருத்தமானது என்ற ரீதியில் உரையாற்றிய போது…..,

 

முகா வின் ஏனைய எம்பிக்களான தௌபீக், பைசல் காசிம் மற்றும் முத்தலிபாவா பாறுக் ஆகியோர் ஹரீஸ் எம்பிக்கு சார்பாக எழுந்து கருத்து வெளிப்படுத்தினர்.

 

இதன் போது குறுக்கிட்ட மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், ஹரீஸ் எம்பி உட்பட ஏனைய எம்பிக்களுடனும் தர்க்கம் புரிந்தார். அரசுக்கு சார்பாக வாதிட்டார்.

 

இதன்பின்னர் எழுந்த ஹாபீஸ் நஸீர், அரசுக்கு சார்பாக கடுமையாக வாதிட்டார். மிகவும் சண்டித்தனமான பாணியில் தனது உரையை ஆரம்பித்த அவர் அடிக்கடி தூசன வார்த்தைகளை பிரயோகித்து அரசுக்கு சார்பாகத்தான் முகா முடிவை எடுக்க வேண்டும் என கடும் தொணியில் கர்ச்சித்தார்.

 

இவருக்கும் ஜெமீலுக்கும் சார்பாக ஏனைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான – மன்ஸூர், நஸீர், தவம், அன்வர் மற்றும் லாபீர் ஆகியோர் கதைத்தனர்.

 

இதனையடுத்து உயர்பீடக் கூட்டம் மீன் சந்தை போன்று காட்சியளித்தது.

 

இதன் பின்னர் கருத்து வெளிப்படுத்திய நயிமுல்லாஹ் ‘ முஸ்லிம்கள் இன்னும் என்ன செய்தால் இந்த அரசை விட்டு நீங்கள் வெளியேறுவீர்கள் என்று தலைவர் ஹக்கீமை பார்த்து கேட்ட அவர் , அரசிலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கான காரணங்களையும் மிக நீண்ட நேரம் அடுக்கடுக்காக எடுத்துக் கூறினார்.

 

இவ்வாறு கூட்டம் சண்டையும் சச்சரவுமாக போய்க்கொண்டிருந்த போதிலும் கட்சியின் தவிசாளர் – அமைச்சர் பஸீர் சேகுதாவுத் மற்றும் செயலாளர் நாயகம் ஹஸன் அலி ஆகிய இருவரும் எதுவுமே பேசாமல் மிகவும் மௌனமாக இருந்து கொண்டிருந்தனர்.

 

இதனை அவதானித்த சட்டத்தரணி கபூர் மற்றும் ஹனீபா மதனி ஆகியோர், பஸீர் மற்றும் ஹஸன் அலியை நோக்கி ‘ நீங்கள் இருவரும் மௌனமாக இருக்கின்றீர்கள.; உங்கள் மௌனத்தை கலையுங்கள். பார்வையாளர்களாக இருக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

 

எனினும் கூட்டம் முடியும் வரை அவர்கள் இருவரும் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.
‘மார்க்கப் பணி புரியும் ஓர் இஸ்லாமிய அமைப்பின் சிலர் என்னை சந்தித்தனர். அவர்கள் கூறினார்கள் என்னிடம் -‘ முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் அநியாயம் இழைக்கும் இந்த அரசிலிருந்து வெளியேறுமாறு உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்’ என்றனர் என்றார் நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் தாஹிர்.

 

இதன்பிற்பாடும் மேலும் சிலர் கருத்து வெளிப்படுத்த முற்பட்ட போது , பிரச்சினைகளும் சச்சரவுகளும் மேலும் அதிகரிக்கலாம் என்ற ஐயத்தில் கூட்டத்தை உடன் நிறைவு செய்யுமாறு அங்கிருந்த சிலர் வேண்டிக் கொண்டதற்கமைய உயர்பீடம் எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

உயர்பீடக் கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறிய சில உறுப்பினர்கள் ‘ கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் அரச சார்பான போக்கிற்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன் இது கட்சியையும் சமுகத்தின் மனோ நிலையையும் புறம் தள்ளும் செயற்பாடு என்று வேதனை அடைந்தனர்.

 

உயர்பீடக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான 07 பேர் மாத்திரம் அரசுக்கு சார்பான போக்கையும் முகாவின் 04 எம்பிக்கள் உள்ளடங்கலாக பெரும்பாலான உயர்பீடத்தினர் அரசிற்கு எதிரான போக்கையும் கொண்டிருந்தன் மூலம் கட்சி உயர்பீடத்தில் முரண்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

 

முகாவின் உயர்பீடக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வரும் பஸீர் சேகுதாவூத், எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்று இறுதி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த உயர்பீடத்தில் எதுவும்; பேசாமல் மௌனமாக இருந்தமை அவர் தற்போது எடுத்துள்ள புது அவதாரம் என உயர்பீடத்தின் சிலர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

 

முஸ்லிம் சமுகத்தின் மனோநிலைக்கு ஏற்பவே முகா முடிவெடுக்கும் என்ற மனோ நிலை இன்று வரை முஸ்லிம் சமுகத்திடம் இருந்து கொண்டே இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team