நைஜீரியாவில் பயங்கரவாதிகள் அட்டூழியம் – பள்ளிக்கூடத்தில் புகுந்து 30 மாணவர்கள் கடத்தல்

Read Time:2 Minute, 9 Second

நைஜீரியா நாட்டில் பள்ளிக்கூடங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி மாணவ, மாணவிகளை கடத்திச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உட்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோடு பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ, மாணவிகளை கடத்திச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக, அண்மைக் காலமாக பள்ளி மாணவ, மாணவிகள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கின்றன.

இந்நிலையில், நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாகாணம் கதுனாவில் இகாபி என்ற நகரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.‌ அதன்பின், அவர்கள் பெண்கள் உட்பட 30 மாணவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றனர்.‌

இதுதவிர பள்ளிக்கூட ஊழியர்கள் சிலரும் கடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜம்பாரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து 279 மாணவிகள் கடத்தப்பட்டதும், அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Previous post ஜெனீவாவில் வெளியிடப்பட்டது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆவணப்படம் – 360 பக்கங்களைக் கொண்ட அறிக்கையும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தூதுவரிடம் நேரடியாக கையளிப்பு
Next post யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு!