நோர்வேயில் இந்த ஆண்டு 950 தொன் ஹலால் இறைச்சி விற்பனை - Sri Lanka Muslim

நோர்வேயில் இந்த ஆண்டு 950 தொன் ஹலால் இறைச்சி விற்பனை

Contributors

-A.J.M மக்தூம்- 

வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாத நிலையிலும், உணவுக்காக தயார் படுத்தப் படும் இறைச்சியில் ஹலால் முத்திரையிட்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றும் பல்வேறு ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதின் எதிரொலியாக உற்பத்தி நிறுவனங்கள் முறையான ஹலால் உணவை உறுதி செய்ய நோர்வே உணவு பாதுகாப்பு அதிகாரசபை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சென்ற மார்ச் மாதம் உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்று ஹலால் இறைச்சி என முத்திரையிட்டு விற்பனை செய்த உணவில் அதிக அளவில் பன்றி இறைச்சி  கண்டு பிடிக்கப் பட்டதின் பின்னணியில், தாம் உட்கொள்ளும் உணவு நிச்சயம் ஹலாலானதாக இருக்க வேண்டும் என்பதனால் நோர்வே உணவு பாதுகாப்பு அதிகாரசபை தலையிட்டு தமக்கு ஹலால் உணவை உறுதி செய்யுமாறு முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதின் பேரிலேயே குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

குறித்த திட்டங்களை வரவேற்றுள்ள நோர்வே முஸ்லிம் கவுன்சில் அத்திட்டங்கள் ஹலால் சந்தையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தவிர்க்க பெரும் பங்களிப்பு செலுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நோர்வேயில் இந்த ஆண்டு 950 தொன் ஹலால் இறைச்சி விற்பனை செய்யப் பட்டுள்ளது. கடந்த 2012 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 தொன்கள் மேலதிகமாக இந்த ஆண்டு விற்பனை செய்யப் பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 4.5 மில்லியன் நோர்வே சனத் தொகையில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் முஸ்லிம்கள் மாத்திரமே உள்ளமை குறிப்பிடத் தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team